crossorigin="anonymous">
வெளிநாடு

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது

இஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உடன்பாடு

இஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது.

எட்டு கட்சிகளின் புதிய கூட்ணி உருவாகி விட்டதாக மையவாத யேஷ் அடிட் கட்சியின் தலைவர் யேர் லேபிட் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டணி சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன் படி வலதுசாரி யாமினா கட்சியின் தலைவர் நெஃப்தலி பென்னெட் முதலில் பிரதமராகப் பதவி ஏற்பார். பின்னர் லேபிட்டிடம் பிரதமர் பதவி ஒப்படைக்கப்படும்.

அரசு பதவியேற்பதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும். கூட்டணி உடன்பாடு குறித்து அதிபர் ரிவ்லினிடம் தெரிவித்து விட்டதாக தாம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் லேபிட் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத இஸ்ரேலிய மக்களுக்குச் சேவையாற்றும் வகையில் அரசு செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிரணியினரின் கூட்டணி அமைவது சாத்தியமில்லை என்று கருதப்பட்ட நிலையில், லேபிட், பென்னெட் மற்றும் இஸ்லாமிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மன்சூர் அப்பாஸ் ஆகியோர் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திடம் படத்தை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன

“இந்த முடிவு மிகவும் கடினமானது. பல சலசலப்புகள் இருந்தன. ஆயினும் உடன்பாட்டை எட்டுவது முக்கியமாகப்பட்டது” என செய்தியாளர்களிடம் பேசும்போது அப்பாஸ் குறிப்பிட்டார். “அரபு சமூகத்தின் நலனுக்காக ஏராளமான நல்ல அம்சங்கள் இந்த உடன்பாட்டில் இருக்கின்றன ” என்றும் அவர் கூறினார்.

வரும் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை பென்னெட் பிரதமராக இருப்பார் என்றும் அதன் பிறகு தாம் பிரதமர் பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் அதிபருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் லேபிட் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்காக விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிபர் ரிவ்ரின் உத்தரவிட்டிருக்கிறார். 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால், இஸ்ரேல் அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்படும். கடந்த இரு ஆண்டுகளில் 5-ஆவது முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் நிலை உருவாகும்.

இஸ்ரேலிய அரசியலின் அனைத்து வகையானக் கொள்கைகளையும் கொண்டதாக புதிய கூட்டணி அமைந்திருக்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் 8 கட்சிகளுக்கும் பொதுவான கருத்துகள் மிகமிக அரிது. ஆயினும் நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ஒரே திட்டத்துடன் இவை இணைந்திருக்கின்றன.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்:-

யேஷ் அடிட் (மையவாதம்) – 17
ப்ளூ அண்ட் ஒயிட் (மையவாதம்) – 8
இஸ்ரேலி பெத்தேனு (வலதுசாரி தேசியவாதம்) – 8
லேபர் (சமூக – ஜனநாயகம்) – 7
யாமினா (வலதுசாரி) – 7
நியூ ஹோப் ( இடதுசாரி) – 6
மெரேட்ஸ் ( இடதுசாரி) – 6
ராம் ( அரபு இஸ்லாமிக்) – 4

62 உறுப்பினர்களைப் பெற்றுள்ள இந்தக் கூட்டணி நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 61 வாக்குகளைப் பெற்றாக வேண்டும்.

கூட்டணியை இறுதி செய்வதற்கான மாரத்தான் பேச்சுகள் டெல் அவிவ் நகருக்கு அருகே ஒரு விடுதியில் நடைபெற்றன. கஞ்சாவுக்கு சட்டப்படியான அங்கீகாரம் வழங்குவது. சட்டவிரோதக குடியேற்றங்களுக்கு அபராதம் விதிப்பது என பல முக்கிய அம்சங்கள் குறித்து இதில் பேசப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி அதிக இடங்களில் வென்றது. ஆனாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. கூட்டணி அமைப்பதிலும் வெற்றிபெறவில்லை. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணி உருவானது. நெதன்யாகுவை பதவியில் இருந்து அகற்றுவதுடன் ஊழல் வழக்குகளில் அவரை வீழ்த்தவும் எதிரணியினர் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

நெதன்யாகு ஆட்சியில் இருந்து அகற்றப்படும் நிலை ஏற்பட்டதற்கு இடதுசாரி எதிர்க்கட்சிகள் காரணமல்ல. மாறாக கூட்டணியில் இருந்த, நெதன்யாகுவின் கருணையற்ற அணுகுமுறையால் எதிரிகளாக மாறிய வலதுசாரிகளே காரணமாகியிருக்கின்றனர் என பிபிசியின் மத்திய கிழக்கு ஆசிரியர் ஜெரேமி போவென் கூறியுள்ளார்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: