crossorigin="anonymous">
வெளிநாடு

ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டு கொலையை வீடியோ பதிவு செய்த பெண்ணுக்கு விருது

அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து அழுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம் பெண் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்தார்.

இதையடுத்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்றன. போலீஸ்காரர் டெர்ரக் சவுவின் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். அவருடன் இருந்த 3 போலீஸ்காரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண். அப்போது அவருக்கு வயது 17. ஜார்ஜ் பிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய அந்த வீடியோ தான் மிக முக்கியமான காரணம். உலகம் முழுவதும் பரவிய வீடியோவால், இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இளம் பெண் டார்னெல்லா பிரேஸரை பாராட்டும் விதமாக அவருக்கு சிறப்பு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எமிலியோ மொரநாட்டி என்ற புகைப்பட கலைஞர் தனது அற்புதமான படங்கள் மூலம் 2 பிரிவுகளில் புலிட்சர் விருதினை தட்டி சென்றார்.

பல்வேறு மக்கள் போராட்டங்களின்போது எமிலியோ பதிவு செய்த படங்கள் அவருக்கு இரண்டு புலிட்சர் விருதுகளை பெற்று தந்துள்ளன. இன ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வழங்கியதற்காக ராய்டட் நிறுவனத்திற்கும் புலிட்சர் விருது சென்றுள்ளது. டானியா லியோன் என்பவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

சினிமாவுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதை போல ஊடக, புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருது புலிட்சர் விருது. அமெரிக்கா பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912-ம் ஆண்டு முதல் பத்திரிக்கை, இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம், ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + = 11

Back to top button
error: