வெளிநாடு

100 கண்ணிவெடிகளை கண்டுபிடித்த எலி மரணம்

100 கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்துக் கொடுத்த அபார மோப்ப சக்தி கொண்ட எலி மகாவா மறைந்தது. அதற்கு வயது 8.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டறிவதில் திறம்பட செயல்பட்டு வந்தது மகாவா என்ற எலி. தனது பணிக்காலத்தில் 100 கண்ணிவெடிகளை அந்த எலி கண்டறிந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாவா நேற்று உயிர் துறந்தது.

மகாவா எலி ஆப்பிரிக்காவின் டான்சானியா நாட்டில் பிறந்தது. அங்கு வளர்க்கப்பட்டது. அங்கிருந்து கம்போடியாவுக்கு கொண்டுவரப்பட்டு கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் பணிக்காகவே பிரத்யேகமாக பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டது.

கம்போடியா நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு பகுதிகளில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகளில் சிக்கி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததால், அவற்றை அகற்றுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இந்தப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பணிகள் மிகவும் தாமதமாகும் என்பதால், விலங்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எலிகளைக் கொண்டு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்தப் பணியில் தன்னை சிறப்பாக இணைத்துக் கொண்டது மகாவா என்ற எலி.

இதன் மிகச் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக இங்கிலாந்து விலங்குகள் நல அமைப்பு, எலி மகாவாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவப்படுத்தியது. அந்த அமைப்பின் 77 ஆண்டுகால வரலாற்றில் எலி ஒன்று தங்கப் பதக்கம் பெற்றது இதுவே முதன்முறையாகும்.

கண்ணி வெடிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் பயிற்சியை எலிகளுக்கு அபோபா என்ற தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. எலிகள் மோப்ப சக்தி மூலம் கண்ணி வெடிகளை அடையாளம் காண்கின்றன.

மகாவா மறைவு குறித்து, அபோபா தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், அபோபாவில் அனைவருமே மகாவா இழப்பால் வாடுகிறோம். அதன் சேவைக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம். மகாவா வியத்தகு பணியை செய்து சென்றுள்ளது. மகாவாவின் வியக்க வைக்கும் மோப்ப சக்தி கம்போடிய மக்கள் நிம்மதியாக, கை, கால் இழக்கும் அச்சமின்றி வேலை செய்ய, விளையாட வழிவகை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Back to top button
error: