crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் பொருளாதார நெருக்கடி

மொத்த வெளிநாட்டுக் கடன் 45 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பீடு

“சமையல் எரிவாயுவின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துவிட்டது, இதற்கு மேலும் எங்களால் சிலிண்டரை வாங்க முடியாது” என்கிறார் நிலுகா தில்ருக்சி. 31 வயதான நான்கு குழந்தைகளுக்குத் தாயான நிலுகா, தன் குடும்பத்தினருக்கு எப்போதும் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்திதான் சமைத்து வந்தார், ஆனால் தற்போது விறகு மட்டுமே ஒரே வழி என்கிறார்.

“என் குழந்தைகளுக்கு நான் தினமும் மீன் மற்றும் காய்கறி கொடுத்து வந்தேன். இப்போது ஒரு காய்கறி மற்றும் அரிசிச்சோறு மட்டுமே கொடுத்து வருகிறோம்” என்கிறார் நிலுகா. “முன்பு நாளொன்றுக்கு மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தோம், இப்போது சில நேரங்களில் நாளுக்கு இரு வேளை மட்டுமே சாப்பிட முடிகிறது”.

நிலுகா மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கையில் கொழும்புவின் புறநகர் பகுதியில் வசித்து வருகின்றனர். அவரது கணவர் ஒரு தினக் கூலியாக இருக்கிறார், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.

கடந்த நான்கு மாத காலத்தில்,சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 7.50 அமெரிக்க டாலரிலிருந்து 13.25 டாலராக 76.6% விலை அதிகரித்துள்ளது.

2.2 கோடி மக்கள் வாழும் தீவு நாடான இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில், அந்நாட்டின் அந்நியச் செலாவணி கிட்டத்தட்ட 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிந்துவிட்டது. அது சில வார இறக்குமதி செலவுகளை மட்டுமே எதிர்கொள்ளப் போதுமானது.

அதன் விளைவாக, அரசு சில அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிகளைக் குறைக்க வேண்டி வந்தது, அதில் உணவுப் பொருட்களும் அடக்கம். இது போக எரிபொருள் மற்றும் சரக்கு போக்குவரத்து விலை அதிகரிப்பால், பால் பவுடர் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை இன்னும் அதிகரித்தது.

விலைவாசி அதிகரிப்பு இலங்கை மட்டுமே எதிர்கொள்ளும் பிரச்சனையல்ல. இந்தியா, பாகிஸ்தான் போன்ற மற்ற ஆசிய நாடுகளும் பணவீக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. ஆசிய கண்டத்தில் வாழும் மக்கள் தங்களின் தினசரி உணவு மற்றும் எரிசக்தி செலவுகளைச் சமாளிக்க மற்ற செலவுகளைக் குறைத்து வருகிறார்கள்.

தன் நாட்டு மக்களின் உணவுக்கே வெளிநாட்டு இறக்குமதிகளை அதிகம் நம்பி இருக்கும் சிறிய தீவு நாடான இலங்கையில், இந்த விலைவாசிப் பிரச்சனை மோசமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, அந்நாட்டின் சிறிய பால் உற்பத்தித் துறையால், உள்ளூர் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை, எனவே பால் பவுடரை இறக்குமதி செய்கிறது இலங்கை.

கொழும்புவில் உள்ள ஜன நெருக்கடி மிகுந்த முக்கிய காய்கறி சந்தையில் டஜன் கணக்கிலான கடை உரிமையாளர்கள் கேரட், பீட் ரூட், கறிவேப்பிலை என பல காய்கறிகளை விற்கிறார்கள். விலைவாசி அதிகரிப்பது குறித்து பல கடை உரிமையாளர்கள் வெளிப்படையாக புகார் கூறுகிறார்கள். மேலும் விலையைக் குறைக்கவும், குறைந்த அளவில் காய்கறி வாங்குவதைக் தவிர்க்கவும் நிறைய பேரம் பேசுவதாகக் கூறுகின்றனர்.

“தற்போதைய மாதாந்திர சம்பளத்தைக் கொண்டு இரு வாரங்கள் மட்டுமே வாழ முடியும், காரணம் விலை வாசி அதிகரித்துவிட்டது. எங்களின் எதிர்காலம் குறித்து எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அரிசியின் விலை கூட அதிகரித்துவிட்டது. அரசு நடத்தும் கடைகளின் முன் நீண்ட வரிசை நிற்கிறது” என பொருள் வாங்க வந்தவர்களில் ஒருவரான சுவர்ணா விளக்கினார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தேவை உச்சத்தில் இருக்க, இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை, வருடாந்திர அடிப்படையில் கடந்த மாதம் 21.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பால் பவுடரின் விலை 12.5% அதிகரித்திருப்பதால், டீக்கடை உரிமையாளர்கள் சங்கம், பால் டீ விற்பதை மொத்தமாக நிறுத்த முடிவு செய்துள்ளனர். தேவை ஏற்பட்டால் மட்டும் அதிக விலைக்கு பால் டீ விற்பனை செய்யப்படும் என்று கூறுகின்றனர்.

“உணவு விலை அதிகரிப்பை மிகவும் தீவிரமாகக் கருதுபவர்கள் இலங்கை மக்கள். . ஏற்கனவே நாங்கள் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகளால் நிறைய எதிர்மறை உணர்வுகள் நிலவுகின்றன” என்கிறார் வெரைட் ரிசர்ச் என்கிற சிந்தனைக் குழுவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் தேஷல் டி மெல். “இதே அளவில் விலைவாசி அதிகரித்தால் அது சகிப்புத்தன்மையை இழக்கும் கட்டத்துக்கு வெகு அருகே அவர்களை கொண்டு செல்லலாம் என நான் கருதுகிறேன்”. என்கிறார் அவர்.

2022 புத்தாண்டுக்கு முன், இலங்கை அரசு தன் அந்நிய செலாவணியை 3.1 பில்லியன் அமெரிக்க டாலராக கரன்சி மாற்று ஒப்பந்தங்கள் மூலம் அதிகரித்தது. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 45 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அக்கடன்களுக்கு வட்டி கட்ட மட்டும் 6 பில்லியன் டாலர் தேவை. பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகளும் இதே நிலையைத்தான் எதிர்கொண்டு வருகின்றன.

கொரோனா பெருந்தொற்று மற்றும் உலக அளவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை ஏற்றம் ஆகியவை இலங்கையின் பிரச்சனையையும் அதிகரித்துவிட்டன. பெருந்தொற்று காரணமாக இலங்கையின் மிகப்பெரிய வருவாய் தொழிலான சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, சுற்றுலா மூலம் இலங்கை 4 பில்லியன் அமெரிக்க டாலரை வருவாயாக ஈட்டியது, கொரோனாவால் அதில் கிட்டத்தட்ட 90% வருவாய் சரிவை எதிர்கொண்டுள்ளது.

அரசோ தங்கள் முன் அதிக தேர்வுகள் இல்லை என்கிறது. “பெருந்தொற்றினால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை மீதான அழுத்தம் அதிகரிப்பு காரணமாக, நாங்கள் இறக்குமதிகள் மீது கட்டுப்பாடு விதிக்க வேண்டி இருந்தது. ஒரு பொறுப்புள்ள அரசாக நாங்கள் அதை நிர்வகிக்க வேண்டும்” என இலங்கை அமைச்சர் சேஹன் சேமசிங்கே பிபிசியிடம் கூறினார்.

எதிர்கட்சியினரோ விலைவாசி ஏற்றத்தைக் எதிர்த்து போராட்டங்களை நடத்தினர் “இப்பிரச்சனை நீண்ட காலமாக உருவாகிக் கொண்டிருந்தது. எங்கள் சக்திக்கு மீறி நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் உற்பத்தி செய்வதை விட அதிகம் நுகர்கிறோம்” என்கிறார் இலங்கையின் எதிர்ட்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பொருளாதார சீர்திருத்த அமைச்சரான ஹர்ஷா டி சில்வா.

மக்கள் தரப்பில் அதிகரித்து வரும் கோபத்தைக் குறைக்க அரசு சமீபத்தில் $1 பில்லியன் டாலருக்கு ஒரு நிவாரணத் திட்டத்தை அறிவித்தது, அதில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வும் அடக்கம். சில உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மீதான வரியை நீக்கியது, ஏழை மக்களுக்கு வருமான உதவியையும் அறிவித்தது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக, சராசரியாக ஒரு கண்டெயினர் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கு அனுப்புவதற்கான செலவு கடந்த 2020ஆம் ஆண்டில் 2,000 டாலராக இருந்தது, கடந்த ஆண்டு 10,000 டாலராக அதிகரித்துள்ளது.

போக்குவரத்து செலவீனங்கள் அதிகரிப்பு, மீண்டு வரும் பொருளாதார வளர்ச்சியை பாதிப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு அமைப்பு எச்சரித்தது. தங்கள் இறக்குமதிக்கு கடல்வழி போக்குவரத்தை பெரிதும் நம்பி இருக்கும் இலங்கை போன்ற சிறிய தீவு நாடுகள், இறக்குமதி விலை ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படலாம் என அவ்வமைப்பின் மதிப்பீடுகள் கூறியுள்ளன.

எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் மின்சார விலை ஏற்றம் மொத்த விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதோடு போக்குவரத்து சேவை வழங்குபவர்களும் தங்கள் கட்டணத்தை அதிகரிக்கிறார்கள். இலங்கையின் அண்டை நாடான இந்தியாவில், வரலாறு காணாத வகையில் கடந்த நவம்பர் மாதம் வருடாந்திர மொத்தவிலைக் குறியீடு 14.2 சதவீதத்தைத் தொட்டது.

மறுபக்கம் கொழும்புவில், ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருக்கும், நிலுகா தில்ருக்சி போன்ற வெகுஜன மக்கள், பொருட்களின் விலை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் கூட, தொடர்ந்து குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாகிவிடும் என கவலையில் உள்ளனர்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 17 = 19

Back to top button
error: