crossorigin="anonymous">
ஆக்கங்கள்வணிகம்

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவும் கொழும்பு துறைமுக நகரமும்

பிரபல சட்டத்தரணி ருஷ்டி ஹபீப்

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட மூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (2021 மே 27) கையெழுத்திட்ட நிலையில், கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவை அமைக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், கடந்த 20ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் 148 வாக்குகள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட நிலையில், 89 மேலதிக வாக்குகளினால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு அரசாங்கம் சார்பில் அனைவரும் ஆதரவாக வாக்களித்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன எதிர்த்து வாக்களித்திருந்தன.

எனினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சார்பில் நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். இவ்வாறு ஆதரவாக வாக்களித்த தமது கட்சியின் உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்திக் கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த நிலையில், இந்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்ட நிலையில், கொழும்பு துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழு சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்தது.

கொழும்பு துறைமுகநகர் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கிய நிலையில், அந்த சட்டமூலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர். உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னணியில், அது தொடர்பிலான விசாரணைகள் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு விசாரணைகளை நடத்திய உயர்நீதிமன்றம், தமது விசாரணை அறிக்கையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பியது. இந்த நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை, சபாநாயகர் கடந்த 18ம் தேதி நாடாளுமன்றத்தில் வாசித்தார். அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலத்தில் திருத்தங்கள் சில மேற்கொள்ளப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.

அதே போன்று, சட்டமூலத்தின் சில சரத்துக்களை அமல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதுடன், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் என உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. எனினும், உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை திருத்திக்கொள்வதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழு என்றால் என்ன – கொழும்பை அண்மித்த கடல் பரப்பில் நிலமாக்கப்பட்ட பகுதியின் நிர்வாகம் தொடர்பிலான அமைப்பே கொழும்பு துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழு என பிரபல சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் தெரிவிக்கின்றார்.

கொழும்பு துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஆட்சேபித்து, உயர்நீதிமன்றத்தில் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனு மீதான வழக்கொன்றில் சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் முன்னிலையாகியிருந்தார். இந்த நிலையிலேயே, அவர் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தபோது இதனைக் கூறினார்.
,
இந்த ஆணைக்குழுவிற்கு இந்த சட்டமூலத்தின் ஊடாக சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையின் தற்போது சில நிறுவனங்களுக்கு உள்ள அதிகாரங்கள், துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதேவேளை, சில அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதுமாத்திரமன்றி, துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழுவிற்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். உதாரணமாக வரி விலக்களிப்பு, சில அனுமதிப் பத்திர நடைமுறை இலகுவாக்கல் உள்ளிட்ட மேலும் பல சலுகைகள் இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ள துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக, ஆணைக்குழுவில் 7 உறுப்பினர்களும், ஒரு தலைவரும் இடம் பெறுவதாக அவர் குறிப்பிடுகிறார். இலங்கைக்கு சொந்தமான, ஒரு தனியான நிலப்பரப்புக்குள் நிர்வாகத்தை நடத்துவதற்கான அதிகாரம், ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையின் குற்றவியல் சட்டங்கள் அனைத்தும், துறைமுக நகரத்திற்குள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் அதேவேளை, ஏனைய சட்டங்களில் சில மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அதேபோன்று, சிவில் வழங்குகளை பொருத்த வரை இலங்கை நீதிமன்றங்களில் அந்த வழக்குகளை ஏற்றுக்கொள்ள முடியும் என்கிறார். ஆனால், ஆணைக்குழு வழங்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்கிறார் அவர்.

துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழு: கடமைகள் என்ன – துறைமுக நகருக்குள் வரக்கூடிய முதலீட்டாளர்கள், காணி கொள்வனவாளர்கள், வீடுகளை கொள்வனவு செய்வோர், வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான சட்டதிட்டங்களை உருவாக்கி, அவற்றுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக அங்கீகாரத்தை பெற்று, அதனை இந்த பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதே, துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழுவின் கடமை என சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் தெரிவிக்கின்றார்.

மேலும், துறைமுகநகருக்கு தேவையான கொள்கைகளை வகுத்தல், நிர்வாக ரீதியிலான தீர்மானங்களை எடுத்தல், அனுமதிகளை வழங்குதல், விதிவிலக்குகளை மேற்கொள்ளுதல், தேவையான அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதும் ஆணைக்குழுவின் கடமையாகும் என அவர் குறிப்பிடுகின்றார். துறைமுக ஆணைக்குழு பிராந்தியத்திற்குள் சகல நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பொறுப்பு, பொருளாதார ஆணைக்குழு வசமாகின்றது என அவர் கூறுகின்றார்.

உதாரணமாக, கொழும்பு மாநகர சபை, அதன் நிர்வாகத்திற்குள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதோ, அதேபோன்று, துறைமுக நகருக்குள்ளான ஆட்சியை முழுமையாக நடைமுறைப்படுத்துவது இந்த துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழுவின் கடமை என சட்டத்தரணி குறிப்பிடுகின்றார். இந்த சட்டத்தின் ஊடாக கொழும்பு மாநகர சபைக்கு காணப்படுகின்ற அதிகாரங்கள் விலக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் ஊடாக துறைமுகநகர் இலங்கையின் பகுதியாக இருக்குமா? அல்லது வேறொரு பகுதியாக செயற்படுமா? இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதைபோன்று, துறைமுகநகர் என்பது கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஒரு நிலப் பரப்பு என சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் குறிப்பிடுகின்றார்.

நாடாளுமன்றத்தில் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்படும் வரை, அது கொழும்பு மாநகரத்திற்கு சொந்தமான ஒரு நிலப்பரப்பாக காணப்பட்டதாகவும், ஆனால் தற்போது அது ஆணைக்குழுவிற்கு சொந்தமான நிலப்பரப்பாக காணப்படுகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.

கொழும்பு நிர்வாகத்திற்கு சொந்தமான நிலப் பரப்பு என்கின்ற போதிலும், அது கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமாகாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்த நிலப்பரப்பின் பெரும் பகுதி, ஆணைக்குழுவின் ஊடாக வெளிநாடுகளுக்கு வழங்கப்படவுள்ள அதேவேளை, இலங்கையர்களுக்கும் சில பகுதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறுகிறார்.

இந்த நிலப்பரப்பில் நிலத்தை பெற்றுக்கொள்வோர் நீண்ட கால திட்டத்தின் பிரகாரம், தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார். இலங்கையின் நிலப்பரப்பை வெளிநாடுகளுக்கு கொள்வனவு செய்து, அதனை ஆட்சி செய்யும் வகையிலேயே அந்த நிலப் பரப்பு அமையும் என அவர் கூறுகின்றார்.

சீனாவின் ஆதிக்கம் எவ்வாறு அதிகரிக்கும் – இந்த நிலப் பரப்பிற்குள் சீனர்கள், பெருமளவில் வருகைத் தரவுள்ளதாக சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் தெரிவிக்கின்றார். முதலீட்டாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் சீனர்கள் வருகை தரவுள்ளதாக கூறிய அவர், அவ்வாறு வருகைத் தருவோருக்கு விசேட சலுகைகள் கிடைக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.

சீனர்களுக்கான பாடசாலைகள், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த நிலப்பரப்புக்குள் காணப்படுகின்றது என அவர் கூறுகின்றார். இவ்வாறு வருகை தரும் சீனர்கள், கொழும்பு துறைமுக நகருக்குள் முடங்க வேண்டிய அவசியம் கிடையாது என கூறிய அவர், கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளுக்கு செல்வதற்கான சந்தர்ப்பமும் அவர்களுக்கு கிடைக்கும் என சட்டத்தரணி தெரிவிக்கின்றார்.

இந்த நிலப்பரப்பின் நடவடிக்கையானது, இலங்கைக்குள் சீனர்களில் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் என அவர் கூறுகின்றார். தமது வர்த்தக நடவடிக்கைகளின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு சீனர்கள் பாரிய பங்களிப்பை செய்யும் அதேவேளை, தமது ஆதிக்கத்தையும் இலங்கைக்குள் செலுத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

துறைமுகநகர் பகுதியில் என்ன நாணயம் பயன்படுத்தப்படும் – துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும் ஒரு வெளிநாட்டு நாணயத்தின் ஊடாக துறைமுகநகருக்குள்ளான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். இதன்படி, பெரும்பாலும் சீனாவின் நாணயமான யுவான், கொழும்பு துறைமுகநகருக்குள் ஆதிக்கம் செலுத்தம் சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

துறைமுக நகருக்குள் இடம்பெறும் உற்பத்திகள், ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் அனைத்தும் யுவான் நாணயத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார். பெருமளவிலான சீனர்களின் ஆதிக்கம் காணப்படும் ஒரு பகுதிக்குள், டாலர் அல்லது வேறு நாணய பயன்பாடு காணப்படுவதற்கான சாத்தியம் கிடையாது எனவும் சட்டத்தரணி மேலும் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், துறைமுகநகருக்குள் இலங்கை ரூபா பயன்பாடு இருக்குமா? இருந்தால், ஆணைக்குழு சட்டத்தில் விசேட ஏற்பாடாக பதிவு செய்ய வேண்டிய தேவை கிடையாது எனவும் அவர் கூறுகின்றார். சட்டத்தின் ஊடாக வெளிநாட்டு நாணய பயன்பாடு என கூறப்படும் சரத்தின் ஊடாக, குறித்த பகுதியில் யுவான் பயன்படுத்தப்படும் என்ற புரிதலை கொள்ள வேண்டியுள்ளது என அவர் குறிப்பிடுகின்றார். இதனால், எதிர்வரும் காலத்தில் யுவான், இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் என சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் தெரிவிக்கின்றார்.

துறைமுக நகருக்குள் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்கள், வழங்கப்படும் சம்பளங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு தீர்மானிக்கின்ற வெளிநாட்டு நாணயத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படும் என சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் குறிப்பிடுகின்றார்.

இலங்கை குடிமக்கள் துறைமுக நகர் எல்லைக்குள் செல்ல முடியுமா? இலங்கை பிரஜையொருவருக்கு அந்த துறைமுக நகர் பகுதிக்குள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் என அவர் கூறுகின்றார். சட்டத்தில் அது உள்வாங்கப்படா விட்டாலும், நடைமுறையில் அது அமலாக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார். கொழும்பு துறைமுகநகருக்குள் செல்வதற்கு விசா நடைமுறை வராத போதிலும், விசேட அடையாளஅட்டை நடைமுறையொன்று அமல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என அவர் கூறுகிறார்.

மேலும், துறைமுக நகருக்குள் சென்று வெளியில் வரும் போது, சில கட்டண அறவீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார். சுதந்திரமாக செல்ல முடியாது என தான் எண்ணுவதாக சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் குறிப்பிடுகின்றார். எவ்வாறாயினும், சீனாவின் ஆதிக்கம் காரணமாக, இலங்கையின் வெளியுறவு கொள்கைளில் பெரிதும் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாக ருஷ்டி ஹபீப் கூறுகின்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள், அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் எதிர்காலத்தில் இல்லாது போகும் நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார். இலங்கை வெளியுறவு கொள்கைகளில் இதுவரை மேற்கொண்ட நடுநிலைமையிலிருந்து, தற்போது இலங்கை விலகியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இதனால் இலங்கை எதிர்காலத்தில் பாரிய சவால்களை எதிர்நோக்கும் என சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் தெரிவிக்கின்றார்.(நன்றி:பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 1 =

Back to top button
error: