crossorigin="anonymous">
ஆக்கங்கள்

“உங்களது உரிமைகளை அறிந்துகொள்ளுங்கள்” விழிப்புணர்வூட்டும் புத்தகம்

பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வூட்டும் புத்தகம்

பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நோக்கில் தொகுக்கப்பட்ட ‘உங்களது உரிமைகளை அறிந்துகொள்ளுங்கள்’ புத்தகம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (29.11.2023) பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னெடுப்பில் தொகுக்கப்பட்ட இந்தப் புத்தகத்துக்கு USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையும், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) ஒத்துழைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுல்லே, பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ தலதா அத்துகோரல, பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் இணை உப தலைவர் கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் இந்தப் புத்தகத்தை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுல்லே குறிப்பிடுகையில், பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் முகங்கொடுக்கும் வாய்மொழிமூலமான, உடலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டுவதாகது் தெரிவித்தார். அதனால், அவ்வாறன சந்தர்ப்பத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பெண்களிடமுள்ள விழிப்புணர்வு முக்கியமானது என தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ தலதா அத்துகோரல, அலுவலகங்களில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் ஒன்றியம் உள்ளிட்ட பொறுப்பான நிறுவங்களுக்கு தனிப்பட்டதன்மை பாதுகாக்கப்படும் வகையில் அறிவிப்பதற்கு முறையான பொறிமுறை தயாரிக்கப்பட வேண்டும் எனசு் சுட்டிக்காட்டினார். அத்துடன், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான ஒரு கட்டமாக இதனைக் குறிப்பிட முடியும் எனவும் இந்த நடவடிக்கையை முன்னோக்கிக் கொண்டு செல்ல அனுசரணை நிறுவனம் உள்ளிட்ட அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

பணிபுரியும் இடத்தில் பெண்கள் முகங்கொடுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்களுக்கு எதிராகப் பதில் நடவடிக்கை எடுக்கும் முறை மற்றும் முறைப்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய தரப்பினரை தொடர்புகொள்ளும் விபரங்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை சர்வதேச ரீதியில் தொடங்கப்பட்ட ‘16 Days Of Activism’ வேலைத்திட்டத்துக்கு சமாந்தரமாக இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் கௌரவ பியல் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கோகிலா குணவர்தன கௌரவ ரஜிகா விக்ரமசிங்க, கௌரவ மஞ்சுளா திசநாயக்க, கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ ரவுப் ஹக்கீம் மற்றும் கௌரவ மயந்த திசாநாயக்க, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா மற்றும் NDI நிறுவனத்தின் இலங்கைப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 2

Back to top button
error: