crossorigin="anonymous">
விளையாட்டு

டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி  வெற்றி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை போட்டியில் இறுதியாக களத்தில் மோதிய நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.

இது ஆஸ்திரேலியா அணி டி20 உலக கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக பெறும் வெற்றியாகும். முன்னதாக, ஒதுக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை நியூசிலாந்து அணி எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி வெற்றி இலக்கு ரன்களை இரண்டு விக்கெடுகளை இழந்த நிலையில், 19ஆவது ஓவரில் எட்டி வெற்றிக் கோப்பையை பெற்றது.

இத்தனைக்கும் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி எதிர்பார்த்தபடி சிறப்பாக தனது ஆட்டத்தை தொடங்கவில்லை. ஆரோன் ஃபிஞ்ச் வெறும் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில், அவுட் ஆனார்.

ஆனால், மிட்செல் மார்ஷ், தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் கூட்டு சேர்ந்து 92 ரன்களை தங்களின் அணி குவிக்கும் வரை ஆடினார். 38 பந்துகள் கடந்தபோது வார்னர் 53 ரன்கள் அடித்தார். அப்போது, ஆஸ்திரேலிய அணி 107 ரன்களை எடுத்திருந்தது. இதன் மூலம் இந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு கைகூடி வரும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.

இந்த அணியில் கடைசி வரை ஆட்டமிழக்காத வீரராக மிட்செல் மார்ஷ் 77 ரன்களுடன் களத்தில் இருந்தார். முன்னதாக, டாஸில் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யுமாறு நியூசிலாந்தை கேட்டுக் கொண்டது. இதைத்தொடர்ந்து துபை சர்வதேச விளையாட்டரங்களில் இரவு 7.30 மணியளவில் தொடங்கிய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது.

ஆட்டம் தொடங்கிபோது நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 47 பந்துகளில் 85 ரன்களை எடுத்தார். அவர் ஹேசல்வுட்டின் பந்தில் அவுட் ஆனார்.

பிறகு மார்டின் குப்டில் 35 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார். டரில் மிட்செல் 8 பந்துகளில் 11 ரன்களையும் கிளென் ஃபிலிப்ஸ் 17 பந்துகளில் 18 ரன்களையும் எடுத்திருந்தார். இந்த இன்னிங்சில் மிட்செல், வில்லியம்சன், ஃபிலிப்ஸ் ஆகியோரை வீழ்த்தினார் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசல்வுட்.

ஒருபுறம் ஒரு நாள் சர்வதேச போட்டியில் உலக கோப்பையை ஐந்து முறை வென்ற பெருமையை பெற்றுள்ள ஆஸ்திரேலியா, இப்போது டி20 உலக கோப்பையையும் கைப்பற்றி தமது சாதனை திறனை கிரிக்கெட் உலகில் நிரூபித்திருக்கிறது.

ஆனால், டி20 உலக கோப்பையில் கடைசிவரை களத்தில் இருந்து ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் அளவுக்கு நியூசிலாந்து அணி வந்ததுதான் கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய அந்த அணியின் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.(பிபிசி)

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 60 = 69

Back to top button
error: