crossorigin="anonymous">
விளையாட்டு

தங்கப்பதக்கம் வென்ற தருஷி கருணாரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்குத் தங்கப் பதக்கத்தை வென்று தந்த மாணவி தருஷி கருணாரத்ன கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (05) சந்தித்தார்.

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற போது மாணவி தருஷி கருணாரத்னவும் வைபவரீதியாக அழைத்து வரப்பட்டார்.

தருஷி கருணாரத்னவின் பாடசாலை வலள ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி விளையாட்டுப் பாடசாலையில் தடகள போட்டிகளில் ஈடுபட்டுள்ள 76 மாணவர்களும் அவருடன் இந்த நிகழ்வில் இணைந்து கொள்ள அழைக்கப்பட்டனர்.

பாடசாலை மாணவர்கள், அதிபர், தருஷியின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் உட்பட 06 ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவியின் திறமையைப் பாராட்டிய ஜனாதிபதி, 21 வருடங்களின் பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தமைக்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

அதன் பின்னர் தருஷி உள்ளிட்ட மாணவிகளுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடினார்.

விளையாட்டுப் பாடசாலை கருத்திட்டத்தின் கீழ் 1995 ஆம் ஆண்டு கண்டி மாவட்ட விளையாட்டுப் பாடசாலை வலள ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியில் உருவாக்கப்பட்டது, இப்பாடசாலை விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல சாதனைகளை படைத்துள்ளதுடன், தெற்காசிய கனிஷ்ட மட்டத்திலிருந்து ஒலிம்பிக் போட்டிகள் வரை அனைத்து சர்வதேச போட்டிகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளது..

இந்த மாணவர்களின் தடகள விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகள் தொடர்பிலும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

200 மீற்றர் தடகள ஓடுபாதை,300 மீற்றர் பயிற்சி ஓடுபாதை, 130 மீற்றர் நீள ஓடுபாதை உள்ளிட்டதாக விளையாட்டு மைதானத்தை புனரமைப்பதற்காக 220 மில்லியன் ரூபா செலவிட மதிப்பிடப்பட்டுள்ளதாக இதன் போது அறிவிககப்பட்டது.

இரண்டு கட்டங்களின் கீழ் இரு வருடங்களுக்குள் இந்த நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியதோடு தேவையான நிதியை மத்திய அரசின் ஊடாக ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித்.யு கமகே, வலள ஏ ரத்நாயக்க கல்லூரி அதிபர் தம்மிக்க ஹேரத், தருஷி கருணாரத்னவின் வகுப்பு ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் மற்றும் தருஷி கருணாரத்னவின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 3 = 11

Back to top button
error: