இந்தியா – பிரான் ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு? விசாரிக்க நீதிபதி நியமனம்

பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல்போர் விமானங்களை ரூ.59ஆயிரம் கோடிக்கு வாங்குவதற்காக அந்நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்துடன் இந்தியா கடந்த 2016-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, படிப்படியாக இந்தப் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதுவரை 23 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்துள்ளன.
இதனிடையே, ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ரஃபேல் விமானத்தின் உண்மையான விலையை விட அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இதில் லஞ்சம் கைமாறி இருப்பதாகவும் அக்கட்சி கூறியது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தற்போது பிரான்ஸில் பூதாகரமாக மாறியுள்ளது. அந்நாட்டில் செயல்படும் ‘மீடியாபார்ட்’ எனும் செய்தித் தளமானது, இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் செய்தி வெளியிட்டது.
ரஃபேல் ஒப்பந்தம் இறுதியாவதற்காக உதவி செய்த நபருக்கு பெரும் தொகை கைமாறி இருப்பதாகவும், இந்திய அதிகாரிகள் சிலருக்கும் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியின் அடிப்படையில், பிரான்ஸில் இயங்கும் ‘ஷெர்பா’ எனும் தொண்டு நிறுவனமானது, அந்நாட்டின் பொருளாதாரக் குற்றங்களை விசாரிக்கும் பிஎன்எஃப் அமைப்பிடம் அண்மையில் புகார் அளித்தது.
இதையடுத்து, ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு ஏதும் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஒருவரை பிஎன்எஃப் அமைப்பு நேற்று (03) நியமனம் செய்து உத்தர விட்டது.(இந்து)