crossorigin="anonymous">
பொது

தேசிய டிஜிட்டல் கொள்கை இல்லாமையினால் இலங்கை பின்தங்கியுள்ளது

தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாமை காரணமாக உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை கடுமையாகப் பின்னடைந்துள்ளதாகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.

உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தகவல் தொழிநுட்பத் துறையுடன் தொடர்புபட்ட சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான முன்மொழிவுகளை சமர்பிப்பதற்கு அரச மற்றும் தனியார் துறையில் தகவல் தொழிநுட்ப நிபுணர்கள், அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

விசேடமாக E-Governance எண்ணக்கருவின் கீழ் அரச நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வலையமைப்பை ஸ்தாபிப்பதற்கு முடியாமல் உள்ளமை மற்றும் அந்தக் கொள்கைகளை துரிதமாகத் தயாரித்து அரசாங்கம், பிரஜைகள் மற்றும் வர்த்தகர்களுக்கிடையில் இடைவெளியைக் குறைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் இந்நாட்டின் தகவல் தொழிநுட்பத் துறை பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், அதில் பல வருடங்கள் அனுபவம் கொண்ட தொழில்வாண்மையாளர்களின் உழைப்பு நாட்டை விட்டு வெளியே செல்வது பிரதான சிக்கலாகும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது இலங்கையில் பாடசாலை பாடத்திட்டத்தில் தகவல் தொழிநுட்பப் பாடத்தை அறிமுகம் செய்திருந்தாலும், அதில் துறைசார் நிபுணர்கள் போதியளவு தலையீட்டை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளமை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிதாக மேற்கொள்ளப்படும் கல்வி மறுசீரமைப்புகளில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பப் பாடத்தை கட்டாயப் பாடமாகக் கொண்டுவரும் இயலுமை தொடர்பில் கண்டறியுமாறு இதன்போது பரிந்துரைக்கப்பட்டது.

அரச பல்கலைக்கழகங்களில் தகவல் தொழிநுட்பப் பாடத்துடன் சம்பந்தப்பட்ட விரிவுரையாளர்களின் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு கவனம் செலுத்தப்பட வேண்டும் என இங்கு கருத்து முன்வைக்கப்பட்டதுடன், விரிவுரையாளர்களுக்கு ஒரு சில வரி நிவாரணத் திட்டத்தை தயாரிப்பது பொருத்தமானது என குழுவில் முன்மொழியப்பட்டது.

இலங்கையில் தகவல் தொழிநுட்பத் துறையின் உழைப்பின் தரமான தன்மை உயர்ந்தளவில் காணப்படுவதாக துறைசார் நிபுணர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். அதனால் துறைசார் உழைப்புக்கான கேள்வி தொடர்பில் பாரிய சிக்கல்கள் இல்லை என்பதால், நாட்டிலிருந்து வெளியேறாமல் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம் போன்ற நாடுகளிலுள்ள நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு அனுமதிப்பதன் மூலம் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டு செலாவணி யை அதிகரிக்க முடியும் என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டது. அதற்கு மேலதிகமாக தற்போதைய மின்சார நெருக்கடியினால் ஏற்படும் மின் வெட்டு காரணமாக சிறிய அளவிலான தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவது மற்றும் பாரிய நிறுவங்களின் மின்சக்தி செலவு அதிகரிப்பது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அண்ணளவாக 3.47 மில்லியன் டொலர்களான இலங்கையின் ‘டிஜிட்டல் பொருளாதாரம்’ மொத்த பொருளாதாரத்தின் 4.7 % என்பதுடன், உலகிலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அது 15% அளவில் காணப்படுவதாக குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதேபோன்று, சிறிய அளவிலான விற்பனையாளர்களுக்கு கப்பல் கட்டணம், தபால்க் கட்டணம் மற்றும் கூரியர் சேவைக் கட்டணம் போன்ற ஏற்றுமதி செலவுகளை குறைத்துக்கொள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கூட்டத்தில் அரச மற்றும் தனியார் துறையுடன் தொடர்புபட்ட நிபுணர்கள், அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்வாண்மையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 − 64 =

Back to top button
error: