crossorigin="anonymous">
வெளிநாடு

அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து ஆலோசனைக் குழு தலைவர், இந்தியாவின் மூத்த வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல் பதவியில் விலகல்

இந்தியாவில் கொரோனா தொற்று கைமீறிச் சென்றுவிட்டது

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.81 லட்சமாக குறைந்திருக்கிறது என்றாலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,106 என புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது.

ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் இந்தியாவின் மூத்த வைராலஜிஸ்ட்களில் ஒருவரான ஷாஹித் ஜமீல், அரசின் நடவடிக்கைகளை விமர்சித்துவிட்டு தன் பதவியில் இருந்து விலகியுள்ளார். கடந்த ஆண்டு, இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் திரிபுகளைக் குறித்து ஆராய Indian SARS-CoV-2 Genome Sequencing Consortia (INSACOG) என்கிற ஆலோசனைக் குழுவை நிறுவியது ஒன்றிய அரசு. அதற்கு இந்தியாவின் மூத்த வைராலஜிஸ்டான ஷாஹித் ஜமீல் தலைவராக இருந்தார்.

சில தினங்களுக்கு முன் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் “கொரோனா வைரஸில் இருந்து இந்தியா எப்படி தப்பிக்கும், தடுப்பூசிகள் மட்டுமே நாட்டை பாதுகாத்துவிடாது” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். அது மே 13 அன்று பிரசுரமானது.

அக்கட்டுரையில், கொரோனா விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து எழுதி இருந்தார். இந்த கட்டுரைக்குப் பிறகு, INSACOG குழுவின் தலைவர் பதவி விலகியுள்ளதாக ஏஎன்ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

தி நியூயார்க் டைம்ஸில் பிரசுரமான கட்டுரையில் “தற்போது இந்தியாவில் குறிப்பிடப்படும் கொரோனா பரவல் மற்றும் மரணங்கள் எண்ணிக்கையை விட, உண்மையான எண்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம்” என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் உடனடியாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். பல இந்திய மாநிலங்கள் ஊரடங்கில் இருக்கின்றன. இது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைக்க உதவும்.

உடனடியாக சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும். அது உயிர்களைப் பாதுகாக்க உதவும். மருத்துவமனைகளின் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்கு தற்காலிக மருத்துவமனை வசதிகளை உருவாக்கலாம். பணியில் இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், செவிலியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கலாம். அதோடு முக்கிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜனின் விநியோகத்தையும் அரசு வலுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது மந்த கதியில் இருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 7.5 மில்லியன் முதல் 10 மில்லியன் டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜமீல்.

ஆதாரங்கள் அடிப்படையில் கொள்கைகளை வகுப்பதில் கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். 800 இந்திய விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் குறித்து ஆராயவும், அதை மதிப்பீடு செய்யவும், அது மேற்கொண்டு பரவால் தடுக்க உதவும் கொரோனா தொடர்பான தரவுகளை வழங்குமாறு, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அக்கட்டுரையில் குறிப்பிட்டு சுட்டிக் காட்டியுள்ளார்.

தரவுகள் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை எனவும், ஏற்கனவே இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கைமீறிச் சென்றுவிட்டதையும் குறிப்பிட்டு தன் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார் வைராலஜிஸ்ட் ஜமீல்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: