crossorigin="anonymous">
வெளிநாடு

தடுப்பூசிக்கு கட்டணம் மத்திய அரசின் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

அடுத்த விசாரணை ஜூன் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

இந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாகவும் 18-44 வயதுடையவர்களுக்கு கட்டண அடிப்படையிலும் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கட்கிழமை விசாரித்தது. அதன் முழு விவரம் மற்றும் உத்தரவு செவ்வாய்க்கிழமை வெளியானது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் அரசு கடைப்பிடிக்கும் சில கொள்கை அல்லது திட்டம் எதேச்சதிகாரம் அல்லது பகுத்தறிவற்றதாக உள்ளது என கருத்து தெரிவித்தனர்.

மேலும், கொரோனா தடுப்பூசி கொள்கையை மறுஆய்வுக்கு உட்படுத்துமாறும் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் எவ்வளவு தடுப்பூசி கையிருப்பில் இருக்கும் என்ற திட்டத்தை வகுக்குமாறும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான அடுத்த விசாரணை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டிசம்பர் மாத இறுதிக்குள் தகுதிவாய்ந்த அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று தெரிவித்தார். அரசின் இந்த உறுதிமொழி, ஏற்கெனவே பல்வேறு அரசியல் தலைவர்களாலும் செயல்பாட்டாளர்களாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

வழக்கு விசாரணையின்போது சில முக்கிய விஷயங்களை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, மத்திய அரசு வாங்கும் தடுப்பூசிக்கு சீரான விலையும் அதே தடுப்பூசியை மாநிலங்கள் வாங்கும்போது ஒரு விலையும் நிர்ணயிக்கப்படுவது ஏன்? அந்த தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் விற்கப்படும் விலை மற்றும் சர்வதேச விலையின் ஒப்பீடு தொடர்பான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றின் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கும் அரசு 18 – 44 வயதுடையவர்களுக்கு மட்டும் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்தது என்று கேள்வி எழுப்பினர்.
கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாகும் வேளையில், அதை பெறும் சமூகங்களை வயது அடிப்படையில் பிரித்து ஒரு சாராருக்கு கட்டணமும் வேறொரு சாராருக்கு இலவசமாகவும் தடுப்பூசி வழங்கக்கூடாது. இந்த நடவடிக்கையில் வயோதிகர்களுக்கும் பிற பிரிவினருக்கும் முன்னுரி்மை கொடுக்கப்படுவதில் தவறில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அதே சமயம், முதல் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி பெற்ற 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கி விட்டு, 18-44 வயதுடையவர்களிடம் இருந்து ஏன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது? இதற்கான முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கொரோனா தடுப்பூசியை பரவலாக வழங்கும் கொள்கைப்படி, கடந்த மே 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்கான கட்டணத்தை மத்திய அரசு ஏற்பதாக அறிவித்துள்ளது. 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசியை போட, அவற்றை தயாரிப்பாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் மாநில அரசுகள், அந்த தயாரிப்பாளர்களிடம் இருந்து மத்திய அரசு வாங்கும் தொகையை விட அதிக விலை கொடுத்து தடுப்பூசி வாங்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, தனியார் மருத்துவமனைகள், மாநில அரசு தரும் விலையை விட அதிக விலை கொடுத்து தடுப்பூசி வாங்கி அதை பயனர்களுக்கு வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: