crossorigin="anonymous">
உள்நாடுபொது

9 வது பாராளுமன்ற 2வது கூட்டத்தொடர் ஆரம்ப ஒத்திகை

இலங்கை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிப்பது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (13) இடம்பெற்றதுடன் இதில் பொலிஸ் கலாசார பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர, ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.00 மணிக்கு அரசின் கொள்கைப்பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

அதற்கு முன்னர் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியின் தலைமையில் வைபவரீதியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன்படி மரியாதை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுத்தல் மற்றும் வாகன அணிவகுப்பு என்பன இடம்பெறாது.

ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக பாராளுமன்ற வளாகத்தில் பொலிஸ் கலாசார பிரிவின் பங்களிப்புடன் கலாசார மரியாதை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பதினெட்டாம் திகதி மு.ப. 09.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளதுடன், முதலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரவுள்ளனர்.

பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் வருகையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வருகையும், அதனை அடுத்து அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வருகையும் இடம்பெறும்.

சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் பாராளுமன்ற நுழைவாயிலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை வரவேற்பார்கள்.

படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவிப் படைக்கலசேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி அவர்கள் சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

இதன்போது பாராளுமன்றத்தின் பிரதான வாயிலின் அருகில் ஸ்ரீ ஜயவர்தனபுர, ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவிகள் ஜயமங்கள கீதம் இசைத்து ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதிக்கவுள்ளனர்.

ஜனாதிபதியினால் அரசின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்பட்டதை அடுத்து சபை ஒத்திவைக்கப்படும். அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய விருந்தினருக்கும் தேநீர் விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மேலும் தெரிவித்தார்.

அனைத்துவிதமான சுகாதார முறைகளையும் பின்பற்றி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 5

Back to top button
error: