crossorigin="anonymous">
வெளிநாடு

ஆங் சான் சூச்சிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை

மியான்மர் நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு

மியான்மர் நாட்டு  ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை மேலும் நான்கு ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. 76 வயதான ஆங் சான் சூச்சி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுவது, கரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல், ஊழல் வழக்குகள் என்று ஆங் சான் சூச்சி மீது 11 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன.

இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சூச்சிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது இன்னொரு வழக்கில் ஆங் சான் சூச்சிக்கு மேலும் நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகள் முன் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட அன்று ஆங் சான் சூச்சி வீட்டில் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேயிங் தலைமையிலான படைகள் சோதனை நடத்தியபோது, வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது கடத்தல் கருவிகள் என்று கூறி ராணுவம் வழக்கு தொடர்ந்திருந்தது. மியான்மரில் உள்ள ஜூண்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில்தான் ஆங் சான் சூச்சிக்கு மேலும் நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் எட்டு ஆண்டுகள் தண்டனை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் ஆறு ஆண்டுகள் அவர் தண்டனை அனுபவிக்கவுள்ளார். இந்த ஆறு ஆண்டு தண்டனை காலத்தையும் தலைநகர் நய்பிடாவில் வீட்டுக் காவலில் ஆங் சான் சூகி அனுபவிக்க முடியும் என்று மியான்மர் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த தண்டனை தொடர்பாக சூச்சியின் வழக்கறிஞர்கள் யாரும் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்புகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில், மியான்மர் மனித உரிமை கண்காணிப்பகம் சூச்சிக்கு எதிரான இந்த சட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளது. அதில், “ஆங் சான் சூகிக்கு மேலும் மேலும் தண்டனைகள் அளிப்பது நாடு தழுவிய அளவில் மக்களிடம் அதிருப்தியை அதிகரிக்கும்” என்று எதிர்ப்புக் குரலை பதிவு செய்துள்ளது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 58 = 63

Back to top button
error: