crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்

இலங்கை அமைச்சரவைக் கூட்டம்  நேற்று (31) நடைபெற்றதுடன் இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள்

01. 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

விவசாய உற்பத்திகளுக்காக சேதனப் பசளை பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இரசாயனப் பசளை, பீடைகொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் இறக்குமதியை தடை செய்வதற்கு 2021 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. அநுராதபுரம் தெற்கு மற்றும் அநுராதபுரம் வடக்கு பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலைய நிர்மாணிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இழப்பீடு வழங்கல்

அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவர் நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சால் அநுராதபுரத்தில் ஒன்றிணைந்த நகர அபிவிருத்திக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அநுராதபுர நகரத்தின் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாத்து குறித்த நகர சேவைகள் மற்றும் பொது இடங்களை மேம்படுத்தல் இக்கருத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதன்கீழ் புதிய பேரூந்து நிலையத்தை மேம்படுத்தி அநுராதபுரம் தெற்கு பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும், அநுராதபுரம் பழைய பேரூந்து நிலையம் மற்றும் தொலைதூர பேரூந்து சேவைகள் குறித்த நிலையத்திலிருந்து அகற்றி பிரதான புகையிரத நிலையத்துடன் இணைந்ததாகவும் அநுராதபுரம் வடக்கு பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தால் பாதிக்கப்படும் 302 குடும்பங்களுக்கு, குறித்த பாதிப்புக்களின் இயல்புகளைக் கருத்தில் கொண்டு ஏற்புடைய குறிகாட்டிகளுக்கமைய இழப்பீடு வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. உள்ளுர் மற்றும் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கப்பல் போக்குவரத்துக் கண்காணிப்புத் தொகுதியை (Vessel Monitoring System) நிறுவுதல்

இந்து சமுத்திரத்தின் ரூனா ஆணைக்குழுவின் உடன்படிக்கையின் 15ஃ03 பரிந்தரையின் பிரகாரம் கடலில் பயணம் செய்யும் பலநாள் மீன்பிடிக் கலன்களின் இருப்பிடத்தைக் கண்டறிதல், அனர்த்தங்களின் போதான சோதனை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், பலநாள் மீன்பிடிக் கலன்களைப் பயன்படுத்தி கடல் வழியாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மற்றும் முறைசாரா மீன்பிடிச் செயற்பாடுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கப்பல் போக்குவரத்துக் கண்காணிப்புத் தொகுதியை நிறுவுதல் அவசியமாகும். 2015 ஆம் ஆண்டு கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 1250 பலநாள் மீன்பிடி கலன்களுக்காக செயற்கைக்கோள் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிப்புத் தொகுதியொன்று நிறுவப்பட்டுள்ளது. குறித்த மீன்பிடிக் கலன்களை விட மேலும், அவ்வாறான 4200 பலநாள் மீன்பிடிக் கலன்களில் குறித்த உபகரணத்தைப் பொருத்த வேண்டியுள்ளது. அவுஸ்திரேலியா உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்படும் 5.38 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களைப் பயன்படுத்தி புலம்பெயர்; சர்வதேச நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பெறுகைச் செயன்முறை மூலம் குறித்த கண்காணிப்புத் தொகுதியை பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. தெரனியகல மாலிபொட தோட்டத்தின் வீடமைப்புக் கருத்திட்டம்

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் தலைமையில் தெரனியகல பிரதேசத்தில் நடைபெற்ற ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய மாலிபொடவை சுற்றியுள்ள பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்காக வீடமைப்புத் திட்டமொன்றை மேற்கொள்வதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்காக 171 வீடுகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் கோரிக்கைக்கமைய முன்மொழியப்பட்ட வீடுகள் அடங்கலாக 480 தோட்ட வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள இந்தியாவின் நன்கொடையின் கீழ் மாலிபொட பிரதேசத்தில் 171 வீடுகளை அமைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன் முதற்கட்டமாக 60 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அரச பொறியிலாளர் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் வெளி நோயாளர் பிரிவு (OPD) நிர்வாக அலகு மற்றும் நோயாளர் விடுதித் தொகுதியை நிர்மாணித்தல்

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் வெளி நோயாளர் பிரிவு (OPD) நிர்வாக அலகு மற்றும் நோயாளர் விடுதித் தொகுதியை நிர்மாணிக்கும் கருத்திட்டம் 2022 – 2024 இடைக்கால வரவு செலவுக் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்காக இலங்கை கடற்படையின் உழைப்புப் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கும், சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. பெவசிசுமப் ஊசிமருந்து 100mg/4ml இன் 32,000 குப்பிகளுக்கான பெறுகை

சில புற்றுநோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் இம்மருந்தைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளது. அதற்காக 04 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, பெவசிசுமப் ஊசிமருந்து 100mg/4ml இன் 32,000 குப்பிகளுக்கான பெறுகையை M/s Medmart Pharma (Pvt) Ltd இற்கு 220.8 மில்லியன்கள் இலங்கை ரூபாய்களுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. எரிபொருள் கொள்வனவுக்காக நீண்டகால ஒப்பந்தம் வழங்கல்

2021 யூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2022 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான எட்டு மாதகாலத்தில் கீழ்க்காணும் வகையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய கீழ்க்காணும் நீண்டகால ஒப்பந்தங்களை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• பெற்றோல் (92 Unl) 2,700,000 + 10-5% பரல்களை இறக்குமதி செய்யும் நீண்டகால ஒப்பந்தம் சிங்கப்பூர் ஸ்வீஸ் சிங்கப்பூர் ஓவர்சீஸ் என்டர்பிறைசஸ் தனியார் கம்பனிக்கு வழங்குதல்

• டீசல் (அதிகபட்ச சல்பர் சதவீதம் 0.05) 1,120,000 + 10-5% பரல்களை முத்துராஜவெல SPM மூலம் இறக்குவதற்கான இறக்குமதி ஒப்பந்தம் சிங்கப்பூர் பெட்ரோசைனா இன்டர்நெஷனல் தனியார் கம்பனிக்கு வழங்குதல்

• பெற்றோல் (92 Unl) 1,341,000 + 10-5% பரல்கள் மற்றும் பெற்றோல் (95 Unl) 459,000 + 10-5% பரல்கள் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் சிங்கப்பூர் பெட்ரோசைனா இன்டர்நெஷனல் தனியார் கம்பனிக்கு வழங்குதல்

• டீசல் (அதிகபட்ச சல்பர் சதவீதம் 0.05) 1,120,000 + 10-5% பரல்களை டொல்ஃபின் டாங்கர் பேர்த் (DTB) மற்றும் முத்துராஜவெல SPM ஆகிய இரண்டு வழிகள் மூலம் இறக்குவதற்காக, இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் சிங்கப்பூர் பெட்ரோசைனா இன்டர்நெஷனல் தனியார் கம்பனிக்கு வழங்குதல்.

08. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானசேவை (SLA) கம்பனிக்காக தரைப்பணி சேவை முகவர்களைத் தெரிவு செய்தல்

வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை (SLA) கம்பனிக்கு பாங்கொக் சர்வதேச விமன நிலையம் மற்றும் லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையங்களில் தரைப்பணிச் சேவைகளுக்கான முகவர்களை தெரிவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டி விலைமுறிப் பொறிமுறையைப் பின்பற்றி திட்டயோசனைகள் பெறப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்த பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய 03 வருட காலத்திற்காக கீழ்வரும் ஒப்பந்தங்களை வழங்குவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• பாங்கொக் சர்வதேச விமானநிலையத்தில் தரைப்பணி சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் பாங்கொக் ஃப்லயிட் சர்விசஸ் நிறுவனத்திற்கு வழங்கல்

• லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தின் மூலமும் விமானங்களின் நடமாடும் உயர்த்தியை இயக்குவதற்கான ஒப்பந்தம் டனாட்டா லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்கல்

• லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் பொருட்கள் கையாளுகை சேவை ஒப்பந்தம் வேர்ல்ட்வைற் ஃப்லயிட் சர்விசஸ் லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்கல்

09. புதிய பொலிஸ் தலைமையக் கட்டிடத்தொகுதியை நிர்மாணித்தல்

தற்போது பொலிஸ் தலைமையகம் யோர்க் வீதியும் விகாரை வீதியும் தொடர்புபடும் வீதிக்கு இடையில் 100 வருடங்களுக்கு அதிகமான பழைய 03 கட்டிடங்களில் இயங்கி வருவதுடன், குறித்த கட்டிடத்தொகுதியில் போதியளவு இடவசதியின்மையால் சிவில் நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. பொலிஸ் தலைமையகக் கட்டிடத் தொகுதியை மிரிஹான பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்காக 2012 யூலை மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலைமையில் இலங்கை பொலிசுக்குச் சொந்தமான பெப்பிலியான பிரதான வீதியில் இலக்கம் 142, பெல்லன்தொட்ட சந்தி, அத்திடிய வீதி, தெஹிவல எனும் முகவரியில் அமைந்துள்ள 14 ஏக்கர் 02 ரூட் 38.50 பேர்ச்சஸ் காணியில் பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணித்தல் மிகவும் பொருத்தமென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, பொலிஸ் தலைமையக கட்டிடத்தொகுதி மிரிஹான பிரதேசத்தில் அல்லாமல், இலங்கை பொலிசுக்குச் சொந்தமான குறித்த காணியில் நிர்மாணிப்பதற்கும், தேவைக்கேற்ற வகையில் வேறு வேறாக கட்டிடங்களின் கட்டுமானக் கருத்திட்டங்களுக்கான பெறுகை செயன்முறையை மேற்கொள்வதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ‘குரு அபிமானி’ கொடுப்பனவு வழங்கல்

‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம்’ கொள்கைப் பிரகடனத்திற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களை மனிதவள அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தரப்பினராக அடையாளங்காணப்பட்டு, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட திட்டவட்டமான பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களுக்கு நிரந்தரக் கொடுப்பனவை வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 250/= ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2500/= ரூபாவாக அதிகரிப்பது உகந்ததென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதற்காக, 2021 யூன் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்கத்தால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் 250/= ரூபா மாதாந்தக் கொடுப்பனவு, அடையாளங்காணப்படும் குறிகாட்டிகளுக்கமைய தகுதி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500/= ரூபா வரை அதிகரிப்பதற்கும், அதன் முதற்கட்டமாக 25,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2021/2022 பெரும் போகத்திற்குத் தேவையான சேதனப் பசளை மற்றும் இயற்கை கனிமங்கள் மற்றும் கிலேடட் நுண் தாவர ஊட்டக் கூறுகளை விநியோகித்தல்

நாட்டில் சேதனப் பசளைப் பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில் இரசாயனப் பசளை, பீடை கொல்லிகள் மற்றும் களை கொல்லிகளின் இறக்குமதியைத் தடை செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, 2021,2022 பெரும் போகத்திற்கு தேவையான சேதனப் பசளை விநியோகத்திற்காக துரிதமாக நடவடிக்கையெடுக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது தேசிய பசளைகள் செயலகத்தின் அனுமதிப்பத்திரங் கொண்ட 27 உள்ளுர் சேதன பசளை உற்பத்தியாளர்கள் இருப்பதுடன், அவர்களில் 10 பேரின் உற்பத்தி இயலளவைக் கருத்தில் கொள்ளும் போது 2021/2022 பெரும்போகத்திற்கு 224,000 ஹெக்ரயார்களுக்கு தேவையான உள்ளுர் சேதனப் பசளைகளை விநியோகிப்பதற்கும், மேலும் 100இ000 ஹெக்ரயார்களுக்குத் தேவையான சேதனப் பசளை, அடையாளங் காணப்படும் விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கி உற்பத்தி செய்வதற்கான இயலுமை உள்ளது. அதற்கமைய, கீழ்க்காணும் வகையில் நடவடிக்கைளை மேற்கொள்வதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 2021/2022 பெரும் போகத்திற்குத் தேவையான சேதனப் பசளை மற்றும் இயற்கை கனிமங்கள் மற்றும் கிலேடட் நுண் தாவர ஊட்டக் கூறுகளின் பெறுகைக்காக விசேட பெறுகைக் குழு மற்றும் பெறுகைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக குறித்த விடயம் தொடர்பான நிபுணர்களுடன் கூடிய தொழிநுட்பக் குழுவை நியமித்தல்

• 2021/22 பெரும்போக நெற் செய்கைக்காக 500,000 ஹெக்ரயார்களுக்குத் தேவையான பசளை மற்றும் கனிமங்கள் தேவைகளை சர்வதேச போட்டி விலைமனு பொறிமுறையைப் பின்பற்றி அரசாங்கத்திற்குத் சொந்தமான பசளைக் கம்பனிகள் மூலம் இறக்குமதி செய்து கமநல சேவைகள் திணைக்களத்தின் மூலம் விநியோகித்தல்.

• ஏனைய பயிர்கள் 600,000 ஹெக்ரயார்களுக்குத் தேவையான சேதனப் பசளைகளை குறித்த பயிர்களுக்கேற்ப எமது நாட்டுக்கு பசளை இறக்குமதிக்காக அனுமதிப்பத்திரம் பெற்ற கம்பனிகள் மூலம் இறக்குமதி செய்து குறித்த விவசாயிகளுக்கு விநியோகித்தல்

• உணவுப்பயிர்கள் அல்லாத அலங்காரத் தாவரங்கள், ஒட்டுப் பூங்கன்று செய்கை மற்றும் கொடிப்பயிர்ச் செய்கைகளுக்கு அடையாளங்காணப்பட்ட விசேட பசளைகள் குறித்த பயிர்களுக்குரிய ஆராய்ச்சி நிறுவனங்களின் பரிந்துரைக்கமைய இறக்குமதி அனுமதிப்பத்திர பொறிமுறையின் கீழ் இறக்குமதி செய்து குறித்த விவசாயிகளுக்கு விநியோகித்தல்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 1 =

Back to top button
error: