crossorigin="anonymous">
உள்நாடுபொது

போராட்டங்கள் காரணமாக மீண்டும் கொவிட் பரவல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி

நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் மனோபாவத்தைத் தான் எதிர்பார்க்கவில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம். இதனால், பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி அவரகள் வலியுறுத்தினார்.

உலக விஞ்ஞான தினத்தையொட்டி, இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, அலரிமாளிகையில் இன்று (10) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

“எனது பதவிக்காலத்தில் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இந்தக் காலப்பகுதியில், கொவிட் தொற்றுப் பரவலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டி ஏற்பட்டது. அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த இன்றைய எதிர்க்கட்சியினர், இந்த நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐந்து வருடகால ஆட்சியின் போது ஏற்பட்ட தோல்விகள் மற்றும் பலவீனங்கள் காரணமாகவே, அவர்களுக்குப் பதிலாக என்னை இந்நாட்டு மக்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர். இருப்பினும், எந்தவோர் அதிகார பலமும் இருந்திருக்காதவர்கள் போல் இன்று எதிர்க்கட்சியினர் செயற்படுவது கவலையளிக்கிறது. இந்த முறைமையை மாற்றுவது எதிர்காலத்துக்கான தற்காலத் தேவையாக உள்ளது” என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

தற்கால உலகின் அனைத்துத் துறைகளிலும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆளுகை காணப்படுகின்றது. புதிய தொழில்நுட்ப அறிவின்றி எமது எதிர்காலச் சந்ததியினர் இந்த உலகத்துடன் முன்னோக்கிச் செல்ல முடியாது. அதனைப் புரிந்துகொண்டு, புதிய தொழல்நுட்பத்துடன்கூடிய எதிர்காலச் சந்ததியினருக்கான கல்வி மாற்றங்களைச் செய்வது அவசரத் தேவையாகக் காணப்படுகிறதென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ஆம் திகதியன்று, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான உலக விஞ்ஞான தினம் யுனெஸ்கோ அமைப்பினால் 2001ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையானது, 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளைக் கொண்டாடுகின்றது.
இம்முறை விஞ்ஞான தினத்தையொட்டி விஞ்ஞான வாரமொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. “National Innovation Mission – கனவுகளுக்கு உயிரூட்டும் நிகழ்காலம்” எனும் தொனிப்பொருளில் இம்முறை தேசிய விஞ்ஞான தினக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்துக்கமைய, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட சமூகமொன்றை இலக்கு வைத்து தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களால், நாட்டுக்குள் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் எழுச்சிபெற்றுள்ளன. அதன் பிரதிபலனாக, 2020ஆம் ஆண்டு உலக புத்தாக்கல் சுட்டியின்படி (Global Innovation Index) 101ஆவது இடத்தில் காணப்பட்ட இலங்கை, 132 நாடுகளுக்கு மத்தியில் 2021இல் 95வது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கையின் புத்துருவாக்கிகள் சங்கத்தினால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் புத்துருவாக்கப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு “தசிஸ் விருது” வழங்கும் நிகழ்வு, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களினால் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தினால் உருவாக்கப்பட்ட “ஒட்சிசன் செறிவு” இயந்திரம் தொடர்பான தெளிவூட்டல்களும், இந்த விருது விழாவுக்கு மத்தியில் இடம்பெற்றன.

கல்வி அமைச்சு மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து, நாடு முழுவதிலும் உள்ள 1,500 பாடசாலைகளில் புத்துருவாக்க விஞ்ஞான பீடங்களை நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளன. அதனைக் குறிப்பிடும் வகையில், மாகாண மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 09 பாடசாலைகளுக்கான காசோலைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பன ஜனாதிபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டன.

புத்துருவாக்கிகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுததுவதற்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரச சேவையைச் செயற்றிறன்மிக்கதாக மாற்றுவதற்கும் உள்ள இயலுமை தொடர்பில் எடுத்துரைத்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், ஈ கிராமசேவை முறைமை, டிஜிட்டல் அடையாள அட்டை உள்ளிட்ட அரச சேவையின் செயற்றிறன்களைக் குறிக்கும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜத்த பேருகொட, தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும்  கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 72 + = 79

Back to top button
error: