crossorigin="anonymous">
வெளிநாடு

ஜோ பைடன் கொரோனா மூலத்தை 90 நாட்களில் கண்டறிய உத்தரவு

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து உருவானதா என்பதை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது குறித்த புலானாய்வு அறிக்கையை வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆனால் இது அரசியல் ரீதியாக திரித்து கூறப்படுவதாகவும், சீனா மீது பழிபோடும் செயல் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள வைரஸ் தொடர்பான ஆய்வகத்திற்கும் கொரோனா வைரஸிற்கும் எந்த தொடர்பும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இதுநாள் வரை உலக அளவில் 16.8 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 35 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் வூஹானில் உள்ள கடல்சார் உயிரின உணவுச் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக தொடர்புபடுத்திய ஆய்வாளர்கள், அந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்தே முதன் முதலாக மனிதர்களுக்கு பரவியதாக கருதினர்.

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸின் மூலம் குறித்து ஆய்வு செய்வதற்கு சீனா சென்றிருந்த உலக சுகாதார நிறுவனத்தின் குழு, ஆய்வக கசிவிலிருந்து வைரஸ் பரவியிருக்க `எந்த வாய்ப்பும் இல்லை` என தெரிவித்திருந்தது.

சீனாவிற்கு சென்றவர்களில் ஒருவரான உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மரியம் கூப்மேன்ஸ், அமெரிக்க அதிகாரிகளுக்கு ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால் அவர்கள் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்தார்.

வூஹானின் ஆய்வகத்தில் தற்செயலாக வைரஸ் கசிந்ததைக் காட்டிலும் அது அங்கிருந்து உருவானதற்கான ஆதாரங்கள் வலுவடைந்து வருவதாக அமெரிக்க ஊடகங்களின் சமீபத்திய செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால், அந்த செய்திகளில் இடம்பெற்ற தகவல்களை கண்டித்திருந்த சீனா, அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தமது நாட்டின் உளவு அமைப்புகளிடம் கொரோனா வைரஸின் மூலத்தை 90 நாட்களுக்குள் கண்டறிந்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த விஷயத்தில் உங்களுடைய முயற்சிகளை இரட்டிப்பாக்கி பணியாற்றுங்கள்,” என்று அவர் உளவு அமைப்புகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

“வைரஸ், தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதா அல்லது இது ஆய்வக விபத்தா” என அனைத்தையும் சேர்த்து கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த அறிக்கையை தான் பதவியேற்றபின் கோரியதாகவும் அது தனக்கு கிடைத்துள்ளதாகவும் பைடன் புதன்கிழமையன்று வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்தார். ஆனால் தற்போது இது குறித்து மேலும் தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று பைடன் வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய நிலவரப்படி, இரு சாத்தியமான வைரஸ் மூலம் குறித்து அமெரிக்க உளவு சமூகம் தமது கருத்துகளை வழங்கியிருந்தாலும், தீர்க்கமான முடிவை அவை எட்டவில்லை,” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் உளவு அமைப்புகளிடம் தங்களுடைய வைரஸ் மூலத்தை கண்டறியும் முயற்சியை இரட்டிப்பாக்குமாறு அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் நாட்டின் நாடாளுமன்றத்திடம் அவ்வப்போது தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஜோ பைடன் அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா பணியாற்றும் என்றும் இதில் முழுமையாகவும் வெளிப்படையாகவும், தரவுகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் சர்வதேச புலனாய்வுக்கும் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா சீனாவில் 2019 ஆகஸ்ட் மாதமே பரவத் தொடங்கியதா? – பிபிசி புலனாய்வு
கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
இதேவேளை, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், “கோவிட்-19 மூலம் தொடர்பாக நாடாளுமன்ற குழுக்களின் விசாரணைகளின்போது எழும் கேள்விகளால் எழுந்த நெருக்கடியிலேயே, அந்த கேள்விகளுக்கான பதில் அளிக்கும் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அதை உலக சுகாதார அமைப்பின் பொறுப்புக்கு அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் மாற்றியிருக்கிறது,” என்று கட்டுரை ஒன்றில் கூறியுள்ளது.

மேலும், சிஎன்என் செய்தித் தொலைக்காட்சி செய்தியில், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்திருக்கலாம் என்பதை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்ட அமெரிக்க உளவு அமைப்பின் பிரிவை, தேவையற்ற நிதிச்சுமை நடவடிக்கை எனக்கூறி அதிபரின் நிர்வாகம் மூடி விட்டது என்று கூறப்பட்டது. இந்தப்பின்னணியிலும் அதிபர் ஜோ பைடனின் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 5 =

Back to top button
error: