crossorigin="anonymous">
ஆக்கங்கள்உள்நாடுபொது

இலங்கை வட மாகாண முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் விரட்டப்பட்டு 32வது வருட ஆரம்பம்

(எஸ்.எம்.ஜாவித்)

இருளடைந்துள்ள வடமாகாண முஸ்லிம்களின் 32வது அகவை.

இலங்கையில் 31 வருடங்களாக நீதியின்றி மறக்கடிக்கப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் அவலம் 32வது வருடத்தில்.

இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்களுக்கு வாழ் நாளில் மறக்க முடியாத கரி நாளாக 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிப் பகுதிகளைக் குறிப்பிடலாம். பாசிச விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட நாளாகும். இந்த வருடத்துடன் 31 வருடங்கள் உருண்டோடிவிட்டன.

வடக்கை விட்டு விட்டு செல்லாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்ற சடுதியான அறிவித்தலாகும். இந்த அறிவித்தலைக் கேட்ட ஒவ்வொரு முஸ்லிமின் மனங்களும் தட்டுத்தடுமாறி நிலை குலைந்து விட்டது.
வாழ்வா? சாவா? என்ற இரண்டுக்கும் மத்தியில் பிறந்து வளர்ந்த பூர்வீகத்தை விட்டு வெளியேறுவது என்பது மட்டுமல்லாது தமது ஒட்டுமொத்த உடமைகளையும் விட்டு விட்டு வெளியேறுவது என்பது ஒரு சாதரண மனிதனாலோ அல்லது மனித சமுகத்தினாலோ ஏற்றுக் கொள்ளவோ அல்லது ஜீரணித்துக் கொள்ளவோ முடியாத ஒரு நிலையாகும்.

அந்தளவிற்கு முழு முஸ்லிம் சமுகத்தினதும் மனங்கள் சுக்குநூறாகி கண்ணீரும் கம்பலையுடனும் தமக்கு ஏற்பட்டுள்ள இந்த மரண அச்சுறுத்தல் நிலைமைகளை யாரிடமும் சொல்ல முடியாத ஒரு மாபெரும் துன்பகரமான நாட்களாக அந்த 90ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாத இறுதி நாட்களைக் குறிப்பிடலாம்.

வடக்கை ஆள வேண்டும் என்ற சுய நல போராட்டத்திற்காக விடுதலைப் புலிகள் வடக்கிழக்கில் தமது இனம் மட்டும்தான் வாழ வேண்டும் என்ற அகங்காரத்தின் காரணமாக அவர்கள் மேற்கொண்ட நிதானமற்ற முடிவுகள் வட கிழக்கில் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கும் போல் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் உறவுகளின் ஒற்றுமைக்கும் பாரிய குந்தகத்தை ஏற்படுத்தியது.

சமாதானத்துடனும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த அந்த இரு சமுகங்களையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கக் கூடாதென்ற வாஞ்சனை மூலம் வட மாகாணத்தில் வாழ்ந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஆயுத முனையில் துரத்தியடித்து விட்டனர்.

இந்தச் செயற்பாடு வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை கண்ணீர் கலங்க வைத்ததுடன் சகோதர தமிழ் உறவுகளையும்கூட வாய் விட்டு அழுவதற்கும் கவலை கொள்வதற்கும் வழி சமைத்து விட்டது. ஆயுதத்தின் விளிம்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தை தமிழ் அரசியல் தலைமைகளோ அல்லது புத்தி ஜீவிகளோ அல்லது சமயத் தலைவர்களோ இதனை நிறுத்துவதற்கு முன்சென்று கேட்பதற்கு முடியாத ஒரு மகாபாதகச் செயற்பாடாக அது அமைந்திருந்தது எனலாம்.
\
வடக்கை தமிழ் பிரதேசமாக பிரகடனப்படுத்தி தமது பூர்வீகமாக ஆக்கி தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற முயற்சியின் ஒரு வடிவமே வட மாகாண முஸ்லிம்கள் ஒரு தலைப்பட்சமாக வெளியேற்றப்பட்டமையாகும்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் தனிநாடு கோரி வட மாகாண முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றி அந்த நிகழ்வானது எக்காலத்திலும் முஸ்லிம்களால் மறக்க முடியாத ஒரு துன்பகரமான பதிவினை ஏற்படுத்திய அந்த காரிருள் சூழ்ந்த காலமாகும். அந்த துயர்மிகுந்த காலமானது வாரங்களாகவும் மாதங்களாகவும்இ வருடங்களாகவும் தஸாப்தங்களாகவும் கடந்து 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் 31 வருடங்களைத் தாண்டி 32வது வருடத்திற்கு நகர்த்தியுள்ளது.

இவ்வாறு 31 வருடங்கள் தாண்டிய இம் மக்களின் அவல நிலை தொடர்ந்தும் அகதி வாழ்வாகவே அமைந்து கொண்டு செல்கின்றது. யுத்த வெற்றிக்குப் பின்னரான 12 ஆண்டுகள் நிறைவடைந்தும் வட மாகாண முஸ்லிம்கள் ஆட்சிக்கு வருகின்ற அரசியல் வாதிகளாலும் ஆட்சியாளர்களாகவும் அரசாங்கங்களினாலும் கண்டு கொள்ளப்படாத ஒரு சமுகமாக தத்தளித்தக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு கனப்பொலுதிலும் தமது அகதி வாழ்விற்கு விடிவு கிடைக்காதா? தம்மை தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்ற மாட்டார்களா? என்ற கனவுகளுடனேயே தமது துன்பியல் நாற்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இன்று வரை வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியமர்வு என்பது காணல் நீராகவே அந்த மக்களுக்கு இருந்து வருகின்றது.

யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த அரசும்சரி அதற்கு பின் வந்த தேசிய நல்லிணக்க அரசும் சரி இன்றைய அரசும் சரி இடம் பெயர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் இவர்கள் எல்லோருமே மாற்றாந்தாய் மனப்பான்மையிலேயே இருந்து கொண்டிருக்கிகின்றனர். தாம் அந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய கருமங்களை கவனத்திற் கொள்ளாது தட்டிக்கழித்து வந்து கொண்டிருக்கும் செயற்பாடுகளே இடம் பெற்று வருகின்றன.

இடம் பெயர்ந்த முஸ்லிம் சமுகம் மீள் குடியேற்ற விடயத்தில் நம்பிக்கை அற்றவர்களாகவே இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த மீள் குடியேற்ற விடயங்கள் எல்லாம் வடக்கு முஸ்லிம்களைப் பொருத்தவரை காணல் நீரான கதையாகவே இருக்கின்றது.

கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று அரசாங்கம் ஒதுக்கிய பல கோடி ரூபாய்களைக் கூட முன்னைய வடமாகாண சபை முட்டாள்தனமாக முடக்கி வைத்து முஸ்லிம் சமுகத்திற்கு அதனை வழங்க வில்லை. முஸ்லிம் சமுகத்திற்கு செய்து கொடுக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் இருந்தும் அங்கு ஒருசில தமிழ் தலைமைகளால் முஸ்லிம் சமுகம் இன்று வரை பாரபட்சமாக ஓரங்கட்டப்பட்டுக் கொண்டே வருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய நல்லிணக்க அரசு ஆட்சிக்கு வந்து ஆட்சிக் காலம் நிறைவடையும் கட்டம் வரையும் நீண்ட காலப் பிரச்சினையாக புரையோடி இருக்கும் முஸ்லிம் சமுகத்தின் அகதி வாழ்வு விடயத்தில் அக்கறை காட்டாதிருந்த விடயம் முழு முஸ்லிம் சமுகமும் அந்த அரசின் மீதும் நம்பிக்கை இழக்க வேண்டிதொரு நிலையில் ஏற்பட்டது.

அந்த புதிய அரசு தோற்றம் பெற்றபோது நூறு நாள் வேலைத் திட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்ற விடயங்கள் தொடர்பாக மீள் குடியேற்ற அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தமையும் யாவரும் அறிந்த விடயமாகும். ஆனால் அந்த அறிக்கை கூட அப்போதிருந்த அமைச்சர் சுவாமிநாதனால் கொடுக்கப்பட வில்லை. அவருக்கு பிரதமர் விடுத்த கட்டளையானது அன்று புஷ்வானமானதையே கண்டு கொள்ள முடிந்ததுடன் அதன் கதையே இல்லாமல் போயும் விட்டது.

இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமர் பொறுப்பு வாய்ந்த அமைச்சருக்கு கட்டளையிட்டும் அது ஊடகங்கள் வாயிலாக வெளிவந்திருந்த நிலையிலும் இது விடயத்தில் பிரதமரும் கரிசனை காட்ட வில்லை குறித்த அமைச்சரும் ஒரு காதால் வாங்கி மறுகாதால் விட்டு விட்ட கதையாகவே அமைந்து விட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி யுத்த வெற்றி கொண்டாடிய முன்னைய அரசும்சரி தற்போதைய அரசும் சரி தாம்பெற்ற வெற்றியின் பயன்களை சமாதானத்தையும் அமைதியையும் பாதிக்கப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் விடயத்தில் ஏற்படுத்திக் கொடுக்கத தவறி விட்டதுடன் தொடர்ந்தும் இன்று வரை பாதிக்கப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் பாதிக்கப்படவர்களாகவே தாண்டவமாடுகின்றனர் என்பதே கவலையோடுகூடிய யதார்த்தமான உண்மைகளாகும்.

மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 1990ஆம் ஆண்டு இடம் பெயர்ந்த போது பல ஆயிரமாக காணப்பட்டவர்கள் இன்று பல குடும்பங்களாக பெருகி இடம் பெயர்ந்த மக்களின் தொகை இலட்சக் கணக்காக மாறி இருப்பதுடன் கணிசமானளவு மக்களைத் தவிர ஏனையவர்களுக்கு சொந்த இடத்தில் வாழ சரியான வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை என்ற கண்ணீருடனும் கவலையுடனும் இன்று வரை வடக்கிற்கு வெளியே பல மாவட்டங்களில் வாழ்ந்து வருவதுடன் தமது பூர்வீகத்தைக் கண்டுகொள்ளும் ஆவலுடன் 31 வருடங்களாக காத்திருப்பதும் கூட இன்றைய அரசியல் தலைமைகளால் கண்டு கொள்ளப்படாது இருக்கின்றமையும் அந்த மக்களிடத்தில் பாரியதொரு வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

2009 இன் யுத்த வெற்றி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு பூரண மீள் குடியேற்றத்தை தரும் என்ற கனவு முஸ்லிம் மக்களைப் பொருத்த வரை யுத்த வெற்றி இடம் பெற்று 12 வருடங்கள் கடந்தும் எட்டாக் கணியாகவே இருப்பதை இன்று அரசியல் ஆய்வாளர்கள் கூட சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த யுத்த வெற்றியின்போது மஹிந்த ராஜபக்ஷ அரசால் சர்வதேசத்திற்கு விடப்பட்ட முதலாவது செய்தி இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது எனவே இனி இலங்கையில் அiனவரும் எந்தவித அச்சமுமின்றி தமது சமய விழுமியங்களுடன் வாழலாம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து அகதிகளாக இருப்பவர்கள் விரைவாக மீளக் குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கான சகல வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்ற செய்தி முஸ்லிம்களைப் பொருத்தவரை பகற்கனவாக அமைந்து விட்டது.

முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் சர்வதேசம் வரை தெரிந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் கண்டுகொள்ளாத் தன்மையுடன் மனிதாபிமானமற்ற முறையில் இருந்து வருவம் சர்வதேசம் கூட குறைந்த பட்சம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களையாவது கொடுக்கலாம் அல்லவா ஆனால் இந்த விடயத்திலும் சர்வதே சமும் தொடர்ந்தும் பிழைகளையே செய்து வருகின்றது.

விரும்பியோ விரும்பாமலோ வடக்கில் தமது பூர்வீகத்திற்கு சென்றால் அங்கு ஒருசில தமிழ் அரசியல் வாதிகளாலும் அவர்கள் சார்ந்த அரச அதிகாரிகளினாலும் புறக்கணிக்கப்படும் சம்பவங்களுக்கு குறைந்தபாடில்லை யுத்தத்தாலும் விடுதலைப் புலிகளாலும் நிர்மூலமாக்கப்பட்ட தமது சொந்த வீடுகளைக்கூட மீள கட்டியெழுப்ப முடியாதளவு தடைகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது இவ்வாறிருக்க இன்னொரு புறம் படைத்தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு முஸ்லிம்களின் குடிமனைகளையும் காணிகளையும் பெற்றுக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைமைகளும்கூட பாரிய பிரச்சினையாக இருப்பதுடன் இவற்றிற்கு முகங்கொடுக்க முடியாதளவு சொல்லொனாத் துயரங்களை அடைந்து கொண்டிருக்கின்றனர்

இந்த நாட்டுக் குடிமகன் என்ற அடையாளங்களும்இ ஆதாரங்களும் இருந்தும் வடக்கு முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமான கவலைக்கிடமான முறையில் இருந்து வருவதுடன் அரசு முன்வந்து செய்து கொடுக்காத நிலைமைகள்கூட அவர்களின் மீள் குடியேற்ற விடயத்தில் தொடராக காணப்பட்டு வரும் தடங்கள்களாகவே இருக்கின்றன.

குறிப்பாக முல்லைத்தீவில் முஸ்லிம் சமுகத்தின் காணிகள் முற்றாகவே சூறையாடப்பட்டுள்ளதுடன் அரச காணிகளைக்கூட பெற்றுக் கொள்வதற்கு வட மாகாண சபையும் அங்குள்ள அரசியல் வாதிகளும் தடைகளைப் போட்டு முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக பொய்களைக்கூறி ஆர்ப்பாட்டங்களைக் கூட மேற்கொண்டனர். ஒருசில அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களை பயன்படுத்தி அவர்கள் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்ட சம்பவங்கள் எல்லாம் மலிந்து காணப்பட்டன. ஒருசில ஊடகங்கள் நடுநிலை வகிக்காது ஒருசில அரசியல் வாதிகளுக்கு சோரம்போகும் ஊடகங்களாக காணப்படுகின்றதையும் அவர்களின் செயற்பாடுகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

மன்னாரில் சிலாவத்துறைப் பகுதியில் கடற் படையினர் முஸ்லிம்களின் கிராமங்களை முற்றாகவே கையகப்படுத்தி வைத்துக் கொண்டு விடாதிருப்பதும் முஸ்லிம் மக்களை விரக்தியடையச் செய்துள்ளது. நீதியையும் நியாயத்தையும் வேண்டி நிற்கும் முஸ்லிம் மக்களுக்கு இந்த விடயங்களில் சட்ட ரீதியான முறையில் எந்தவித ஆக்கபூர்வமான சாதகத் தன்மைகளும் அமைய வில்லை. அதனை செய்து கொடுப்பதற்கு அரசும்கூட முன்வராது இருப்பதும் கவலையோடு இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

 

 

இதேபோல் யாழ்ப்பாணத்திலும் தமது சொந்த வீடுகளைக்கூட பாதுகாத்துக் கொள்ள முடியாதளவு இருப்பதுடன் சட்ட ரீதியான ஆவணங்களைக் கூட காட்ட வேண்டிய நிலைமைகள் இருந்தன. அவற்றை இல்லையென்று சொல்லுமளவிற்கு அங்கு அரச செயற்பாடுகளில் அங்குள்ள அதிகாரிகள் இருப்பதும் முஸ்லிம் சமுகத்தினால் அவ்வப்போது இனங்காணப்பட்டுள்ளது. மன்னாரிலும் வவுனியாவிலும் கூட இந்த விடயங்கள் சாதாரணமாகவே நடந்தேறி வந்துள்ளன.

இதன் காரணமாகவே அப்போதுள்ள வட மாகாண சபை முஸ்லிம் சமுகத்தினை ஓரங்கட்டும் ஒரு மாகாண சபையாக இருந்துள்ளதை முஸ்லிம் ஆர்வளர்களும் புத்தி ஜீவிகளும் சுட்டிக்காட்டி வந்திருந்தனர். அப்போதிருந்த மாகாண சபை தேவையில்லை அதனைக் கலைத்துவிட வேண்டும் எனவும் கூறிவந்துள்ளனர்.

இவ்வாறு வடகிழக்கு யுத்தத்தால் முஸ்லிம் மக்கள் இன்று வரை பல்வேறுபட்ட மேடு பள்ளங்களை கடந்து தமது வாழ்வியலை முன்னெடுக்க வேண்டிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். பலவந்தமாக இவ்வாறு விரட்டப்பட்டு இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது 1990ஆம் ஆண்டுக்குமுன் தமிழ் மக்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்ததுபோல் மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற ஆவலுடனேயே இருக்கின்றனர்.

இதுவரை காலமும் இலங்கை அரசோ அல்லது இந்த அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளோ வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் முன்வராத நிலையில் ஐக்கிய நாடுகள் சபையையும் சர்வதேசத்தையும் நம்பி இருந்த நிலையிலும் அதுவும் துரத்தப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் எட்டாக்கணியாகவே இருக்கின்றது.

 

இந்த நாட்டின் முஸ்லிம்கள் ஆட்சியில் பங்கையோ அல்லது நாட்டைப் பிரித்து தமக்கு பங்குகேட்கும் எந்த ஒரு விடயத்திலும் அவர்கள் ஈடுபடாத நிலையிலும்கூட இந்த மக்கள் ஓரங்கட்டப்படுவது விடயத்தில் பாரிய சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் மட்டும் அரசும் அரசியல் வாதிகளும் தமது வாக்கு வேட்டைக்காக அந்த மக்களின் முன்வந்து உங்களை நாம் ஆட்சிக்கு வந்தால் மீள் குடியேற்றுவோம் அது செய்து தருவோம் இது செய்து தருவோம் என்று மண்டியிடுவதும் மூட்டை மூட்டையாக பொய் வாக்குறுதிகளை வழங்குவதும் நடந்தேறிய சம்பவங்களாகும்.

பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட பல தேவைப்பாடுகளுடன் காணப்படுவதுடன் இவ்விடயங்களில் முஸ்லிம்கள் பின்நோக்கிய நிலையில் இருப்பதும் கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களில் இருந்து அறிய முடிகின்றது. இந்த வகையில் இந்த மக்கள் பூரணமான மீள் குடியேற்றத்தையே விரும்புகின்றனர்.

எனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் வட மாகாண முஸ்லிம்கள் ஒரு அவல வாழ்விற்கு உட்பட்ட ஒரு சமுகமாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு உரிய விடயமாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 + = 95

Back to top button
error: