வெளிநாடு

2021ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46 சதவீத அதிகரிப்பு – தேசிய மகளிர் ஆணையம்

இந்தியாவில் 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யூ) தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறியதாவது

2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 46 சதவீதம் அளவுக்கு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி 2021 முதல் ஆகஸ்ட் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 19,953 புகார்கள் வந்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில் இந்த புகார்களின் எண்ணிக்கை 13,618-ஆக இருந்தது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 3,248 புகார்கள் வந்துள்ளன. 2015 ஜூன் மாதம் முதல் தற்போது வரையில் இதுவே ஒரு மாதத்தில் வந்த அதிகபட்ச புகார்களாகும்.

இந்த ஆண்டு வந்த 19,953 புகார்களில் 7,036 புகார்கள் பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையைத் தரவில்லையென்றும், 4,289 புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பாகவும், 2,923 புகார்கள் திருமணமான பெண்கள் மீதான கொடுமை அல்லது வரதட்சிணைக் கொடுமை போன்ற காரணத்துடனும் வந்துள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 10,084 புகார்களும், அதைத் தொடர்ந்து டெல்லியில் 2,147 புகார்கள், ஹரியாணாவில் 995 புகார்களும், மகாராஷ்டிராவில் 974 புகார்களும் தரப்பட்டுள்ளன.

இதுபோன்ற பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக தேசிய மகளிர் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களின் உதவிக்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஹெல்ப்லைன் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பெண்களின் கல்வி மற்றும் சுய அதிகாரத்துக்காக போராடும் அகான்ஷா பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் அகான்ஷா வஸ்தவரா கூறும்போது, “பெண்கள் தங்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படும்போது அதை எதிர்த்து புகார் தரவேண்டும் என்ற மனோநிலை தற்போது அதிகரித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: