crossorigin="anonymous">
வெளிநாடு

இந்தியாவில் கல்வி கற்கும் ஆப்கன் மாணவர்கள் தாய்நாட்டை எண்ணிக் கவலை

இந்தியா – கர்நாடக மாவட்டத்தின் பெங்களூரு மற்றும் தார்வாட் ஆகிய பகுதிகளில் படிக்கும் ஆப்கன் மாணவர்கள், தங்களின் தாய்நாட்டை எண்ணிக் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளும் அமெரிக்கப் படைகளும் ஜூலை மாதம் வெளியேறத் தொடங்கிய காலத்தில் இருந்தே தலிபான்கள், தங்களின் ஆக்கிரமிப்பைத் தொடங்கி நாட்டின் பல பகுதிகளைத் தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவரத் தொடங்கினர்.

அப்போதே ஆப்கானிஸ்தானின் பதக்ஸான், தக்கார் மாகாணங்களைத் தலிபான்கள் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையே தற்போது காபூலும் அவர்கள் வசமாகி உள்ளது. காபூலில் தலிபான்கள் நுழைந்தது தெரிந்ததும் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், ஆப்கன் தற்போது முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டைவிட்டு வெளியேறப் பல்வேறு தரப்பினர் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாவட்டத்தின் பெங்களூரு மற்றும் தர்வாட் ஆகிய பகுதிகளில் படிக்கும் ஆப்கன் மாணவர்கள், தங்களின் தாய்நாட்டை எண்ணிக் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஹரூன் என்னும் மாணவர் கூறும்போது, ”எங்களுடைய குடும்பத்தினரை எண்ணி மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளோம். அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. போனில் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. எனினும் இணையம் மூலம் அவர்களிடம் பேசியபோது, பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தனர்” என்றார்.

பெயர் கூற விரும்பாத ஆப்கன் மாணவர்கள் சிலர் கூறும்போது, ”எங்களுடைய உறவுகள் வீடு திரும்புவார்களா என்றே தெரியவில்லை. அவர்களுக்கு என்ன நடக்கும் என்று கண்ணீர் வருகிறது” என்கின்றனர். மாணவி ஒருவர் கூறும்போது, ”அமெரிக்க அரசின்கீழ் கடந்த சில ஆண்டுகளாக ஆப்கனில் நிலைமை ஓரளவு மேம்பட்டுள்ளது. சமூகக் கட்டமைப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் இப்போது தலிபான்கள் ஆட்சியில் நிலை மோசமாகி உள்ளது.

பெண்கள் மீது தலிபான்கள் என்னென்ன விதிமுறைகளைச் சுமத்துவார்கள் என்று தெரியவில்லை. இதுதான் எங்களின் பிரதானக் கவலையாக உள்ளது” என்கிறார்.

இன்னொரு மாணவி கூறும்போது, ”எங்களில் பெரும்பாலானோரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் இங்கே படித்தது தெரிந்து வேலைக்குச் செல்ல அனுமதி கிடைக்காது என்னும் நிலையில், எப்படி வீட்டில் உட்கார்ந்திருப்பது? என்று கேள்வி எழுப்பினார்.

தர்வாடில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் சிலர், பல்கலை. அதிகாரிகள் தங்களை அழைத்துப் பேசியதாகவும் தங்களுக்கு ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்தனர்.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 6 = 16

Back to top button
error: