crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பாராளுமன்றம் 20 முதல் 22 வரை கூடுகிறது

இலங்கை பாராளுமன்றத்தை இன்று 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை மூன்று நாட்கள் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (15) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

பெப்ரவரி 23ஆம் திகதி போயா விடுமுறை தினம் என்பதால் அன்று பாராளுமன்றம் கூடாது.

இதற்கமைய பெப்ரவரி 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், பி.ப 5.00 மணி வரை பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம், உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்புத் (திருத்தச்) சட்டமூலம், கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்கள் பதிவுக் கட்டளைச் சட்டம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாவது மதிப்பீடு

மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் 2360/36 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான 2296/30 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றைய தினம் மாலை 5.00 மணி தொடக்கம் 5.30 மணி வரை அரசாங்க தரப்பினால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 21ஆம் திகதி புதன்கிழமை, மு.ப 9.30 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் 2371/11 மற்றும் 2371/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட தீர்மானம் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 வரையான காலப்பகுதியில் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் 2238/34, 2303/23 மற்றும் 2362/67ஆகிய இலக்கங்களை உடைய வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.

பெப்ரவரி 22ஆம் திகதி வியாழக்கிழமை, மறைந்த இராஜாங்க அமைச்சர் கௌரவ சனத் நிசாந்த அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணையை முன்வைக்க இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பிரதிச் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 82 − = 72

Back to top button
error: