crossorigin="anonymous">
உள்நாடுபொது

மட்டக்களப்பில் வெள்ளம்: 5,461 குடும்பங்களில் 17,531 நபர்கள் பாதிப்பு

மட்டக்களப்பில் பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் அனர்த்த நிலை ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளின் வீதிகள், வீடுகள் மற்றும் வாழ்வாதார இடங்கள் என பல வெள்ள நீரால் நிரம்பியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின் (10) பிரகாரம் 5,461 குடும்பங்களில் 17,531 நபர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 5 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவின் பாலயடித்தோன கிராம சேவகர் அலுவலகத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 65 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 4,470 குடும்பங்களின் 14,244 நபர்கள் உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களில் ஆகக் கூடுதலாக காத்தான்குடியில் 1583 குடும்பங்களின் 5126 நபர்களும், ஏறாவூர் பற்றில் 1282 குடும்பங்களின் 3907 பேரும் இவ்வாறு தங்கி வருகின்றனர்.

மண்முனைப் பற்றில் 411 குடும்பங்களின் 1233 அங்கத்தவர்களும், கோரளைப்பற்று வடக்கில் 393 குடும்பங்களின் 1207 அங்கத்தவர்களும், போரதீவுப்பற்றில் 294 குடும்பங்களின் 1166 அங்கத்தவர்களும், கோரளைப்பற்று வாழைச்சேனையில் 233 குடும்பங்களின் 744 நபர்களும், மண்முனை வடக்கில் 160 கும்பங்களின் 474 நபர்களும், மண்முனை தெற்கு எருவில் பற்றில் 81 குடும்பங்களது 281 பேரும், மண்முனை தென்மேற்கில் 33குடும்பங்களின் 106 அங்கத்தவர்களும் உறவினர் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களுக்காக ஏழு நாட்களுக்கான உலர் உணவுகளை வழங்குவதற்கான ஒதுக்கீடுகளுக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

மண்முனை வடக்கு மட்டக்களப்பு நாவற்குடா கிழக்கு, மெதடிஸ்த பாலர் பாடசாலையில் நான்கு (04) குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது நபர்களும், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏறாவூர் 4 இல் கோவில் மண்டபத்தில் 34 குடும்பங்களின் 91 நபர்களும், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் புதிய காத்தான்குடி பதுறியா பாடசாலையில் 11 குடும்பங்களின் 20 அங்கத்தவர்களும் தமது வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் தற்காலிமாகத் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகள் அந்தந்த பிரதேச செயலகங்களிலிருந்து விநியோகிக்கப்படுகின்றன.
இது தவிர அதிகரித்த வெள்ளத்தின் தாக்கத்தினால் மாவட்டத்தின் உள்ளுர் போக்குவரத்திற்கும் சில இடங்களில் தடையேற்பட்டுள்ளது.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாஞ்சகல் கோஸ்வே மற்றும் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதனால் கிரானிலிருந்து புலிபாஞ்சகல் வரை மற்றும் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் ஈரலக்குளம், மயிலவெட்டுவான் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சித்தாண்டி தொடக்கம் ஈரக்குளம் வரை, ஆகிய இடங்களில் படகுப் போக்குவரத்து நடைபெறுகின்றது.

கோறளைப்பற்று வடக்கு வாகரையில் ஆற்று வெள்ளம் காரணமாக கல்லரிப்பு பிரதேச போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் கல்லரிப்பிலிருந்து கதிரவெளி வரையிலும் தலா ஒவ்வொரு படகு மற்றும் உழவு இயந்திர போக்குவரத்து சேவையும் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு 24 மணித்தியாலங்களும் கடமையாற்றுவதுடன், வெள்ள அனர்த்தம் தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் மக்களுக்கான விழிப்புணர்வினை மாவட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 91 − = 88

Back to top button
error: