crossorigin="anonymous">
பொது

உண்ணாட்டரசிறை சட்டமூலம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராய்வு

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்துக்கு அமைய ஏற்றுமதிக்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா பணிப்புரை விடுத்தார்.

அரசாங்க நிதி பற்றிய குழுவில் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் அண்மையில் (28) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

தற்பொழுது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்காக அறவிடப்படும் 14% வரியை 30% வரை அதிகரிக்கும்போது இதன் ஊடாக எதிர்பார்க்கப்படும் வருமானம் ஒவ்வொரு துறையிலிருந்தும் எந்தளவு என்பதை தனித்தனியாகக் காண்பிக்குமாறும் நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்குக் குழு பணிப்புரை விடுத்தது.

அத்துடன், இதற்கு முன்னர் காணப்பட்ட வரி விகிதத்தின் கீழ் அந்தந்த ஏற்றுமதிப் பிரிவின் கீழ் பெற்றுக் கொண்ட வருமானம் எந்தளவு என்பது குறித்தும் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதி வரியை அதிகரித்து அரசாங்கத்தின் வருமானத்தைக் கூட்டும் குறுகிய கால முயற்சிக்குப் பதிலாக, தொலைநோக்காகச் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும், இந்நாட்டுக்கு வருமானத்தைக் கொண்டுவரும் ஏற்றுமதியாளர்களை அதைரியப்படுத்தாது ஏற்றுமுதி வரிகளை அறவிட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், இந்த ஏற்றுமதி வரி விகிதத்தைக் குறைப்பது தொடர்பிலான திருத்தங்கள் குழுநிலையின் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் தலைவர் தெரிவித்தார்.

உத்தேச தனிநபர் வருமான வரி அதிகரிப்புத் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் தற்போதைய நிலைமையை ஒப்பிட்டுப்பார்த்து அறிக்கையொன்றைக் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

இதற்கமைய மேலே குறிப்பிடப்பட்ட பரிந்துரைக்கு உட்பட்டு உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி கிடைத்தது.

கசினோவை ஒழுங்குமுறைப்படுத்த தனியான நிறுவனமொன்று இல்லாமை குறித்தும் இங்கு நீண்ட நேரம் ஆராயப்பட்டது. இதுவரை கசினோ வியாபாரத்துக்கு அவசியமான சட்ட ஏற்பாடுகளை வழங்கி 2010ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க கசினோ (ஒழுங்குபடுத்தல்) சட்டம் நடைமுறையில் இருப்பதாகவும், இது வருமானத்தை வசூலிப்பது உள்ளிட்ட ஒழுங்குறுத்தும் நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக இல்லையென்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், இது தொடர்பாக முன்னர் அறிவிக்கப்பட்ட செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்குக் குழு பணிப்புரை விடுத்தது.

இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நளின் பெர்னாந்து, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ பிரமித பண்டார தென்னக்கோன், கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ எம்.ஏ.சுமந்திரன், கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ மயந்த திசாநாயக, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) ரஞ்ஜித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 1 = 4

Back to top button
error: