crossorigin="anonymous">
ஆக்கங்கள்

‘சிறியதொரு தீவில் பறவைகளின் கதை’ சிறுவர் கதைப்புத்தகம் வெளியீடு

சிறுவர்களுக்கு பாராளுமன்றத்திலிருந்து சிறுவர் புத்தகம்

இலங்கைப் பாராளுமன்றத்தினால் வெளியீடான ‘சிறியதொரு தீவில் பறவைகளின் கதை’ சிறுவர் கதைப்புத்தகம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட விருந்தினர்களின் தலைமையில் நேற்று (27) கொழும்பு பொது நூலகத்தின் சிறுவர் பிரிவில் வெளியிடப்பட்டது.

எதிர்கால தலைமைத்துவத்துக்குத் தயாராகும் இந்நாட்டின் சிறுவர்கள் மத்தியில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் குறித்து எளிமையான மொழியில் சுவாரஸ்யமாக விளக்கும் இந்த சிறுவர் கதைப்புத்தகம் சிங்களம், தமிழ் மற்றம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக இந்தப் புத்தகத்தின் முதற் பிரதியை கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த விருந்தினர்களுக்கு சபாநாயகர் புத்தகங்களைக் கையளித்தார்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர சிங்கள மொழியிலும், நிர்வாகப் பணிப்பாளர் ஜீ.தட்சணாரானி தமிழ் மொழியிலும் சிறுவர்களுக்குக் கதைகளைக் கூறினர்.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், பரீட்சையை மாத்திரம் இலக்காகக் கொண்ட கல்வியை விடுத்து, சிறுவயதிலிருந்தே அவர்களின் சூழல் மற்றும் அரசியல் பற்றிய அடிப்படைக் கருத்துக்களை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அந்த நோக்கத்துடன் எழுதப்பட்ட இந்நூலுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

விருதுபெற்ற பேராசிரியர் ஜே.பி.திசாநாயகவின் தொகுப்பு உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தைச் சேர்ந்த நிபுனி பலகமகே, இஷாரா விக்ரமசிங்க, ரிஷ்மியா நூட்டான், எஸ்.ஜயபிரகாஷ், மகேஸ்வரன் பிரசாத், பா.ருத்ரகுமார் ஆகியோர் உள்ளடங்கிய ஆசிரிய குழாமினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான அச்சுப்பதிப்பை சரசவி நிறுவனம் மேற்கொண்டிருப்பதுடன், தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) இதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு சித்திரம் வரையும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையிலுள்ள சிறுவர்கள் மத்தியில் பாராளுமன்றத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காக இலங்கைப் பாராளுமன்றம் இவ்வாறான ஓர் இலக்கியப் படைப்பை அச்சில் வெளியிட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

இந்த நிகழ்வில் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி.கே ஜயதிலக, கொழும்பு மாநகரசபையின் கௌரவ பதில் மேயர் அல்-ஹாஜ் எம்.ரி.எம்.இக்பால், கொழும்பு பொது நூலகத்தின் பிரதான நூலகர் வருணி கங்கபடஆராச்சி, சிறுவர் பிரிவின் நூலகர் எச்.ஏ.எஸ்.சதமாலி உள்ளிட்ட அதிகாரிகளும், NDI நிறுவனத்தின் பிரதிநிதிகளான தரங்கா குணசிங்க, சாமினி பிரேமதிலக ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பாராளுமன்றத்துக்கு வருகைதரும் அனைத்து ஆரம்பப் பிரிவு பாடசாலைகளின் நூலகங்களுக்கும் இந்தப் புத்தகம் உள்ளிட்ட புத்தகத் தொகுதியை வழங்க பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் எதிர்பார்த்திருப்பதுடன், கீழ் வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். தொ.இல – 0112777318/ 0779899085.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: