crossorigin="anonymous">
உள்நாடுபொது

மட்டக்களப்பில் அலுமினிய உற்பத்திச்சாலை திறப்பு விழா

வேலையற்ற இளைஞர் யுவதிகள் 550 பேருக்கு தொழில் வாய்ப்பு

மட்டக்களப்பில் சுமார் 200 கோடி முதலீட்டில் அலுமினிய உற்பத்திச்சாலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இத் தொழிற்சாலையினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம் அதிதியாகக் கலந்து கொண்டு இன்று (05) திறந்து வைக்கவுள்ளார்.

கட்டங்களுக்கான பொருத்து வேலைகளுக்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டுத் தேவைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதுடன் ஏற்றுமதியும் செய்யப்படவுள்ளது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இத்தெழிற்சாலை திறந்து வைக்கப்படுவதனூடாக மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகள் 200 பேர் நேரடியாகவும் சுமார் 350 பேர் நேரில் தொழில்வாய்ப்பினையும் பெற்றுக் கொள்கின்றனர்.

நாடு தற்போது எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் பொதுமக்கள் தொழில் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இத்தொழிற்சாலையானது ஆரம்பிக்கப்படுவதனால் இம்மாவட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதுடன், நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கனிசமான பங்களிப்பை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தொழிற்சாலையானது ஜேர்மன், ஜப்பான், வியட்நாம் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி மீள் சுழற்சி முறையிலான உற்பத்திகளை உருவாக்குகின்றது.

உள்நாட்டில் கிடைக்கப்பெறும் அலுமினிய பொருட்கள் மற்றும் புதிய மூலப்பொருட்களையும் பயன்படுத்தி உற்பத்திகளை மேற்கொள்ளும் திறன்படைத்த தொழிநுட்பம் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. இதனூடாக பூச்சியக் கழிவு முகாமைத்துவம் இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

தொழிற்சாலைகளினால் ஏற்படும் பிரதான பாதிப்பகளான நீர் மாசடைதல், காற்று மாசடைதல் என்பவற்றினைத் தடுப்பதற்காக இலங்கையில் முதன்முதலாக அதிநவீன (Air prolusion control system) காற்று மாசடைவதை தடுக்கும் முறைமை இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர் சுத்திகரிப்பு முறைமையிலும் நவீன தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மிகவிரைவில் இவ்வலுமனியம் தயாரிப்புகள் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும் இதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்னும் கனிசமான பங்களிப்பினை வழங்கமுடியுமெனவும் அல்றா அலுமனியம் நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.ஊனைஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

மிகவிரைவில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திராய்மடு பிரதேசத்தில் உள்ளுர் வழங்களைக் கொண்டு தரை ஓடுகள் (மாபில்) தயாரிக்கும் தொழற்சாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதனூடாக சுமார் இரண்டாயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 39 = 44

Back to top button
error: