crossorigin="anonymous">
உள்நாடுபொது

உமாஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஐவர் நீரில் மூழ்கி மரணம்

அட்டாம்பிட்டிய – அட்டாம்பிட்டிய தோட்ட முதலாம் பிரிவிலிருந்து கெரண்டியல்ல பிரதேசத்தில் ஓடும் உமாஓயாவில் நேற்று (29) நீராடச் சென்ற ஐவர் திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த பிரிவில் வசித்து கடந்த வருடம் இறந்த ஜெயராம் என்பவரது ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கடந்த வெள்ளிக்கிழமை (28) கலந்து கொண்ட உறவினர்களில் 11 பேர் சம்பவ தினம் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கெரண்டியல்ல, உமாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர் இவர்கள் அனைவரும் 20 தொடக்கம் 25 வரைக்குட்பட்ட இளைஞர், யுவதிகளாவர்.

ஆற்றில் நீராடிவிட்டு 6 பேர் அக்கரைக்குச் சென்ற வேளையில் இளைஞர் ஒருவரும் 4 யுவதிகளும் ஆற்றிலிருந்த கற்பாறையொன்றில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கையில் இளைஞர் தவறி ஆற்றில் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக யுவதிகள் ஒவ்வொருவரும் கைகளைப் பற்றிக்கொண்டு ஆற்றில் இறங்கிய வேளையில் திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் தோட்ட இளைஞர்களுடன் இணைந்து ஈடுபட்டு உயிரிழந்தோரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் நெலுவ, கின்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த வயது 21 ஜெயராம் காஞ்சனப்பரியா, வயது 19 செல்வகுமார் பரிமளாதேவி , அட்டன், திம்புலப்பத்தனயைச் சேர்ந்த வயது 24 சடையப்பன் பவானி சந்திரா , அட்டாம்பிட்டிய, முதலாம் பிரிவைச் சேர்ந்த வயது 23 வனராஜா டேவிட்குமார் ஆகியோர் அடங்குவர்.

ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ள நெலுவ, கின்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த வயது 20 செல்வகுமார் சசிப்பிரியா என்ற யுவதியின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை என அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலங்களை மீட்கும் பணிக்கு தியத்தலாவ இராணுவ முகாமைச் சேர்ந்த சுழியோடும் வீரர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளது. உயிரிழந்த எஸ். சசிப்பிரியா, எஸ். பரிமளாதேவி (திரிஷா) ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர்.

இச்சம்பவம் இப்பகுதியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணமல் போன யுவதியின் சடலத்தை மீட்கும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

(தகவல்:-ஆறுமுகம் புவியரசன்)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 50 − 49 =

Back to top button
error: