crossorigin="anonymous">
உள்நாடுபொது

மலையக பெருந்தோட்ட தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற, இழிவான சூழ்நிலையில் வாழ்வு

ஐ. நா. சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவிப்பு

இலங்கையின் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற, இழிவான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் வெள்ளியன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எனினும், இலங்கை மலையகத் தமிழர்களுக்கு இலங்கை மற்றும் இந்திய அரசுகள் உதவி செய்துவருவதாகவும், சர்வதேச அமைப்புகள் இம்மக்களைக் கண்டுகொள்வதில்லை என்றும் ஆளும் தரப்பு கூறுகிறது .

ரோமோயா ஒபோகாடா உரையில் பேசியவை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள மலையக பெருந்தோட்ட மக்கள், தேயிலை தொழில்துறையின் ஊடாக நாட்டிற்கு பாரியளவிலான அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றனர்.ஆண்டொன்றிற்கு சுமார் 1.3 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை இலங்கை இந்த பெருந்தோட்ட துறை மூலம் வருகின்றது.

இந்தியாவிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இவ்வாறு அழைத்து வரப்பட்ட தமிழ் மக்கள், நாட்டின் மலையக பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு, தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்ட தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மலையகத்தில் சுமார் 10 லட்சம் வரையான இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அவர்களில் சுமார் 2 லட்சம் பேர் தேயிலை மற்றும் ரப்பர் தொழில்துறைகளில் நேரடியாக பணியாற்றி வருகின்றனர். தேயிலை மற்றும் ரப்பர் தொழில்துறைகளில் அதிகளவில் பெண் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மக்கள் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்களின் வெற்றியாக நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த சம்பளம் கூட இன்று வரை உரிய வகையில் கிடைக்காத நிலையை எதிர்நோக்கி வருகின்றனர். அதேவேளை, 200 வருட காலமாக லைன்-வீடுகள் என்று அழைக்கப்படும் சிறிய, நெரிசல் மிகுந்த வீடுகளிலேயே இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மிக மோசமான சுகாதார மற்றும் சமூக பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதுடன், காணி உரிமைகள் மலையக மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாக ரோமோயா ஒபோகாடா தனது உரையில் கூறியுள்ளார்.

வீட்டுத் திட்டங்களை இந்தியா அமைத்து கொடுக்கும் நிலையிலும், மலையக மக்கள் லைன் வீடுகளில் மனிதாபிமானமற்ற இழிவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் வாழ்க்கையை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் 14,000 வீடுகள் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ள போதிலும், பெருந்தோட்ட நிறுவனங்கள் அந்த வீடுகளை நிர்மாணிக்க காணிகளை பிரிந்து வழங்க வெளிப்படையாகவே தயக்கம் காட்டி வருவதாக அவர் கூறுகின்றார்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் காணிகளை பிரித்து வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றமையினால், வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தாமதமடைந்து வருவதாக ரோமோயா ஒபோகாடா குறிப்பிடுகின்றார். சாதி என்ற அடிப்படையிலும் இந்த சமூகத்தின் மீதான பாகுபாடு தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருவதை அவர் உரையில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிக வட்டியில் நுண்கடன்களை வழங்கி, அவர்களை நிர்கதி நிலைக்கு கொண்டு செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. பணத்தை திருப்பி செலுத்தாத சந்தர்ப்பங்களில், குழந்தை தொழிலாளர்களை தொழிலுக்கு ஈடுபடுத்தும் நடைமுறையொன்றும் உருவாகியுள்ளதையும் அவர் தனது உரையில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

நுண்கடன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் கூறிய போதிலும், இன்று வரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ரோமோயா ஒபோகாடா தெரிவிக்கின்றார்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 85 − 78 =

Back to top button
error: