crossorigin="anonymous">
உள்நாடுபொது

2021 தொழில் வழிகாட்டல் வாரத்தின் முதல் நிகழ்வு ஒக்டோபர் 04 – 10ம் திகதி வரை

இலங்கை மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு வருடந்தோறும் நடாத்தவிருக்கும் தொழில் வழிகாட்டல் வாரத்தின் முதல் நிகழ்வு இம்மாதம் ஒக்டோபர் 04 முதல் 10ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

நாட்டுக்கு சுமை இல்லாத உழைக்கும் தலைமுறை ஒன்றை உருவாக்கும் பணியில் திணைக்களத்தின் தொழில் வழிகாட்டல், மற்றும் தொழில் பயிற்சிகளுக்கு இணைத்தல், தொழில் தேடுவோரை தனியார் துறை தொழில்களில் இணைத்தல் என்ற எண்ணக்கருவை மக்களிடையே கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள தொழில் வழிகாட்டுதல் வாரத்தை இன்றைய பேரிடர் காலத்தை கவனத்தில் கொண்டு இவ்வருடம் நிகழ்நிலை (Online) முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இவ் தொழில் வழிகாட்டல் வாரம் நாடு முழுக்க சகல பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக திணைக்களத்தின் சார்பில் பிரதேச, மற்றும் மாவட்ட செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வேலை தேடுவோர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள், சுய தொழில் செய்பவர்கள், தொழில் முயற்சியாளர்கள்,தொழில் பயிற்சி வழங்குபவர்கள், தொழில் வழங்குனர்கள், தொழில் வல்லுனர்கள், ஆகியோரை இலக்குக் குழுவாகக் கொண்டு நடைபெறவுள்ளது

தொழில் வாரத்தை ஒட்டி நடைமுறைப்படுத்தப்படும் பல செயலமர்வுகளில் ஒன்றாக பாடசாலை மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டலின் முக்கியத்துவம், தேவைப்பாட்டினை அறிமுகப்படுத்துதை இலக்காகக் கொண்டு தரம் 9,10,11 மாணவர்களுக்கான சித்திரம், கட்டுரை, கவிதை, பேச்சு, வினாடிவினா ஆகிய போட்டிகளையும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான திறந்த கட்டுரைப்போட்டியையும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சகல போட்டிகளும் நிகழ்நிலை (Online) மூலமே நடைபெறவுள்ளது. இப் போட்டிகளுக்கான விண்ணப்பத்துடனேயே ஓவியம், கவிதை, கட்டுரைகளை அனுப்ப முடியும். பேச்சுப் போட்டி, வினாடி வினா போட்டிகளுக்கான திகதி பின்னர் தெரிவிக்கப்படும்.

போட்டிக்கான தலைப்புகள்

1) இலங்கையில் எதிர்கால தொழில் உலகை வென்றெடுப்பதற்கு தொழில்     வழிகாட்டலின் முக்கியத்துவம்.
2) 21ம் நூற்றாண்டும் தொழில் வழிகாட்டலும்.
3) கனவு காண்போம், திட்டமிடுவோம், தொழில் உலகை அழகுபடுத்துவோம்.
4) நாட்டின் அபிவிருத்திக்கு இளைய சமூகத்தின் பங்களிப்பு
5) நாடொன்றிற்கு தொழில் வழிகாட்டல் சேவையின் முக்கியத்துவம்.

*ஓவியம் A4 வெள்ளைத் தாளில் watercolor, பெஸ்டல் போன்ற ஊடகத்தை பயன்படுத்தலாம்.
*கவிதை ஏதாவது ஒரு தலைப்பில் பந்தி ஒன்றில் 05-10 வரிகள் உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.
*கட்டுரை ஏதாவது ஒரு தலைப்பில் 300-500 சொற்களை கொண்டதாக A4 தாளில் எழுதப்படவேண்டும்.

திறந்த கட்டுரை போட்டி

பின்வரும் 03 தலைப்புகளில் 750-1000 சொற்களை கொண்டதாக அமைய வேண்டும்.
* சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மை.
* தொழில் முயற்சியாண்மை மூலம் பொருளாதாரத்தை வெல்லுங்கள்.
* முயற்சியாண்மை கலாசாரத்தை உருவாக்குதல்.

போட்டிக்கான விண்ணப்பங்களை பின்வரும் https://dome.gov.lk/…/images/2021/competitiondetail.pdf link ஐ அழுத்துவதன் மூலம் செல்ல முடியும். போட்டி விண்ணப்பங்கள் ஓகஸ்ட் 23 தொடக்கம் செப்டம்பர் 12 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இப் போட்டிகள் பிரதேச, மாவட்ட, மாகாண மட்டங்களில் நடாத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்கும் சகல மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இப்போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை தங்கள் பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 92 − = 84

Back to top button
error: