crossorigin="anonymous">
உள்நாடுபொது

கோப் குழு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்பு

தேசிய வீடமைப்பு அதிகார சபையில் 2021ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி 688 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அவற்றை விரைவில் பூர்த்தி செய்வதற்கு முகாமைத்துவத் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் கடந்த வியாழக்கிழமை குறித்த அதிகாரசபைக்குப் பணிப்புரை விடுத்தார்.

நிறுவனத்தின் உயர் நிர்வாக மட்டத்தில் 154 வெற்றிடங்கள் காணப்படுவது தொடர்பிலும், 46 மேலதிக பதவிகள் குறித்தும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார். மூன்றாம் நிலை மட்டத்தில் 116 வெற்றிடங்களும் 218 மேலதிக பதவிகளும் காணப்படுவது எவ்வாறு எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

நிறுவனமென்றில் நிலவக்கூடாத நிலைமையொன்றே இங்கு காணப்படுவதாகவும், இது தொடர்பில் விரைவில் ஆராய்ந்து ஒரு மாத காலத்துக்குள் குழு முன்னிலையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அபேவர்த்தனவுக்கு கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் வலியுறுத்தினார்.

2017-2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 3700 பயிலுனர் அலுவலகர்களுக்கு 583 மில்லியன் ரூபா சம்பளம் வழங்கப்பட்டுள்ளமை கோப் குழுவில் புலப்பட்டது.

இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத்.சி.தொலவத்த கேள்வியெழுப்பியதுடன், இவர்களுக்கு முறையாகக் கடமைகள் வழங்கப்படவில்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை உரிய முறையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது தொடர்பிலும் இக்குழு விசேட கவனம் செலுத்தியது. அத்துடன், நிறுவனத்தின் செயற்பாட்டு திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய வருடாந்த கொள்முதல் திட்டம், மனித வள அபிவிருத்தித் திட்டம் மற்றும் உள்ளகக் கணக்காய்வுத் திட்டம் என்பவை உள்ளடக்கப்படாமை குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அதிகார சபையின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததுடன், இதில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, டி.வி.சானக, இந்திக அனுருத்த ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரட்ன, கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, ஜகத் புஷ்பகுமார, பிரேம்நாத்.சி.தொலவத்த, எஸ்.இராசமாணிக்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 13 − = 12

Back to top button
error: