crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஸ்ரீ லங்கன் விமான சேவை 2020/21 நிறுவனத்தின் நட்டம் 45,674 மில்லியன் ரூபா

வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை இலாபமீட்டும் நிலைமைக்கு கொண்டுவரும் பூரண வர்த்தக திட்டமொன்றை தயாரித்து ஒரு மாத காலத்துக்குள் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் அவர்கள் ஸ்ரீ லங்கன் நிறுவனத்தின் தலைவர் அஷோக் பத்திரகே அவர்களுக்கு நேற்று (06) அறிவித்தார்.

அதேபோன்று, தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்ந்து ஒரு மாத காலத்துக்குள் அமைச்சு மட்டத்திலும் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளருக்கு குழு பரிந்ததுரைத்தது. விசேட குழுவொன்றை நியமித்து பரந்துபட்ட ஆய்வொன்றை மேற்கொண்டு துரிதமாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் குழு அறிவித்தது.

வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை அரசங்கத்துக்கு கையகப்படுத்திய தினம் முதல் 2021 மார்ச் 31 ஆம் திகதி வரையான நட்டம் 372,015 மில்லியன் ரூபா என கோப் குழுவில் புலப்பட்டது.

2020/21 ஆண்டுகளின் வரிகளின் பின்னர் அந்த நிறுவனத்தின் நட்டம் 45,674 மில்லியன் ரூபா எனவும், செயற்பாட்டு நட்டமும் அதிகரித்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

அதற்கு கொவிட் 19 தோற்று நோயின் தாக்கம், விமானங்களுக்கான எரிபொருள் செலவு, விமானங்களின் செயற்பாட்டு குத்தகை செலவுகள் மற்றும் ஏனைய குத்தகை செலவுகள் மற்றும் ஏனைய செயற்பாட்டு செலவுகள் அதிகரித்ததுள்ளமை என்பன தாக்கம் செலுத்தியுள்ளன.

நிறுவனத்தின் சாதகமற்ற மூலதன நிலைமை 2021 மார்ச் 31 ஆகி திகதிவரை ஒரு தீவிர நிலையை அடைந்துள்ளதாகவும், அதனால் திறைசேரியின் உதவியின்றி நிறுவனத்தின் தொடர்ச்சியான தன்மை தொடர்பில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுவது தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.

வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசாரணை செய்வதற்கு இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், டி.வி. சானக, இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், பாட்டளி சம்பிக ரணவக்க, இரான் விக்கிரமரத்ன, ஹர்ஷ டி. சில்வா, எஸ்.எம். மரிக்கார், ஜகத் புஷ்பகுமார, ஜயந்த சமரவீர, பிரேம்நாத் சி. தொலவத்த, எஸ். இராசமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2021 ஆம் ஆண்டில் திறைசேரியினால் 500 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக மூலதனமாக இடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் 240 மில்லியன் அமெரிக்க டொலர் இதுவரை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் குழுவில் புலப்பட்டது. அந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ள விதம் தொடர்பிலும் குழு விசேட கவனம் செலுத்தியது.

வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் 2021 மார்ச் 31 ஆம் திகதி சேவையிலிருந்த உயர் முகாமைத்துவ அதிகாரி ஒருவர் 3.1 மில்லியன் ரூபா மாதாந்த சம்பளத்தையும், 82 விமானிகள் 02 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான மாதாந்த சம்பளத்தையும், மேலும் 142 விமானிகள், 12 விமான பொறியியலாளர்கள், பொறியியல் பிரிவின் 09 முகாமையாளர்கள் மற்றும் உயர் முகாமைத்துவ 03 அதிகாரிகள் 01 மில்லியன் ரூபாவுக்கும் 02 மில்லியன் ரூபாவுக்கும் இடைப்பட்ட மாதாந்த சம்பளம் பெறுவதாகவும் குழுவில் புலப்பட்டது.

இந்த சேவையை தேசிய சேவையொன்றாக செயல்படுத்தும் அவசியம் தொடர்பிலும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அதேபோன்று, வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் தினசரி நட்டம் 84 மில்லியன் ரூபா என குழுவில் புலப்பட்டதுடன், அந்தளவு அரச நிதியை செலவு செய்யும் இந்த நிறுவனத்தை இலாபமீட்டும் நிலைமைக்கு கொண்டுவருவதற்கான முறையான திட்டமொன்று தேவை எனவும் குழு சுட்டிக்காட்டியது.

வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் 2019/20 மற்றும் 2020/21 ஆகிய ஆண்டுகளில் அதன் செலவுகளை 66.9 மில்லியன் அமெரிக்க டொலர் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் குழு இதன்போது நிறுவனத்தை பாராட்டியது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 11 = 14

Back to top button
error: