crossorigin="anonymous">
உள்நாடுபொது

கிழக்கு மாகாண முஸ்லிம் எழுத்தாளர், கலைஞர்களுடனான Zoom கலந்துரையாடல்

35 க்கு மேற்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் - மு.ச.ப.அ. திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம்.அஷ்ரப்

முஸ்லிம் கலை, இலக்கிய கலாச்சார அம்சங்களை மேம்படுத்த 35 க்கு மேற்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என கிழக்கு மாகாண முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களுடனான Zoom கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசிய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.பீ.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களுடனான Zoom கலந்துரையாடல் நேற்று (27) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.பீ.எம்.அஷ்ரப் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற பணிப்பாளர் கலந்துரையாடலின் நோக்கத்தை பின்வருமாறு தெளிவு படுத்தினார்.

“முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முஸ்லிம் கலை கலாசார வளர்ச்சி தொடர்பாக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. மாகாண மட்ட முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளல் இதன் நோக்கங்களுள் ஒன்று.

இந்த வகையில் கிழக்கு மற்றும் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களின் முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களுடனான Zoom கலந்துரையால் ஏற்கனவே நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாணம் முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அதிகமுள்ள மாகாணம். இன்று இந்த கூட்டம் தொடர்பான அறிவித்தலை விடுத்தபோது மிகக் குறுகிய நேரத்தில் 120 பேர் தமது பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.

நான் ஜாமியா நளீமியாவில் கல்வி கற்ற காலத்தில் கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் சமுகத்தில் எழுத்தாளர் மற்றும் கலைஞர்களின் பெறுமதியை சொல்லித்தந்தார். பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளைத் தவிர ஒரு நாவலைக் கூட வாசித்திராத நான் ஜாமிஆ நளீமியா எனும் அறிவுக் சோலையில் தான் கலை, இலக்கியம், கலாச்சார அம்சங்கள் தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றேன் என்று கூறிய ஜனாப் ஏ.பீ.எம். அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தில் கலை, இலக்கியம், கலாச்சார அம்சங்களை உயிர்ப்பிக்க வேண்டியதற்கான நியாங்களைப் பின்வருமாறு பட்டியலிட்டார்:

1. தனிமனித ஆளுமை வளர்ச்சிக்கு கலை, இலக்கியம் என்பவை மிக முக்கியமானவை. கலை இலக்கியம் என்பது ஒரு வகையான உணர்வினால் உந்தப்படும் ஆற்றலாகும். இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அத்தனைய உணர்வு உள்ளவர்களுக்கு அந்த உணர்வை வெளிப்படுத்த வாய்ப்பில்லாத போது அவரது வளர்ச்சி ஊணமுற்றதாக அமைந்து விட முடியும்; நம்முடைய சமூதாயத்தில் எத்தனையோ கலைஞர்கள் நமக்குள்ளே சமாதியாக்கப்படுகிறார்கள்.

2. இன்று முஸ்லிம் சமூகம் அடையாளமற்ற சமூகமாக காணப்படுகிறது. கலை, இலக்கியம், கலாச்சார அம்சங்கள் தாம் ஒரு சமூகத்திற்கு முகவரியாக-அடையாளமாக அமைகின்றன.

3. கலை இலக்கியம் கலாசாரம் என்பன இனங்களுக்கிடையில் பாலம் அமைப்பதற்கான ஒரு பலமான கருவியாக முடியும்; இன உறவுக்கு காத்திரமான பங்களிப்பு செய்ய முடியும். இந்த வியடத்தில் நாம் பலவீனமாக இருக்கிறோம். பௌத்த மற்றும் கிறிஸ்தவ சமய திணைக்களங்களின் பெயர்களைப் பாருங்கள். அங்கு கலாச்சாரம் அல்லதுபண்பாட்டலுவல்கள் என்ற விடயம்- பொறுப்பு இல்லை; ஏனெனில் சிங்கள மொழி கலை, கலாச்சார அம்சங்கள் பெருமளவில் கலாசாரத் திணைக்களத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் முஸ்லிம் மற்றும் இந்து சமய திணைக்களங்களின் பெயர்களில் கலாச்சாரம் அல்லது பண்பாட்டலுவல்கள் என்ற அம்சமும்- பொறுப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்து சமய பண்பாட்டலுவல் திணைக்களம் கலை இலக்கிய கலாச்சார அம்சங்களை வளர்ப்பதில் ஆற்றும் பங்கு பற்றி இங்கு விளக்க வேண்டிய அவசியமில்லை; அவ்வாறு அத்திணைக்களம் திறம்பட தன் கடைமையைச் செய்வதற்கு அத்திணைக்கள உத்தியோகத்தர்கள் மட்டுமல்ல; மாறாக அந்த சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் எழுத்தாளர்கள் புத்திஜீவிகளது பங்களிப்பு மகத்தானது.

முஸ்லிம் சமயப் பண்பாட்டலங்கள் திணைக்களம் வெறுமனே மத விடயங்களில் தான் அக்கறை செலுத்துகிறது மர்ஹூம் SHM. ஜமீல் அவர்களுக்குப் பின்னர் இந்த திணைக்களம் கலை இலக்கியத்துறை வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்வது திருப்திகரமான அளவில் இல்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் அதற்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் புத்திஜீவிகளும் பொறுப்புக் கூற வேண்டுமென்பது எனது கருத்தாகும்.

எனவே எமது திணைக்களம் மூலம் இப்போது முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். 2022 இதற்காக வரவு செலவுத்திட்டத்தினூடாக 10 மில்லியன ௹பா நிதி ஒதுக்கீடுகள் கோரப்பட்டுள்ளன.

2021 ம் ஆண்டிலும் கனிசமானளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு அலை கலாச்சாப் பிரிவு உருவாக்கப்பட்டது. அது கலை, இலக்கியம், கலாச்சார விடயங்கள் என்ற உப பிரிவுகளின் கீழ் சுமார் 35 க்கு மேற்பட்ட புதிய திட்டங்களை அமுல் படுத்தி வருகிறது; அல்ஹம்து லில்லாஹ்.
முஸ்லிம்களின் கலாசாரப் பாரம்பரியமான களிகம்பு, பக்கீர்பைத், கஸீதா போன்ற விடயங்களை விஷேடமாக பாதுகாத்து வளர்ப்பதற்கான திட்டமொன்றை கிழக்கு மாகாண கலாச்சார திணைக்கததினூடாக சுமார் 12 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்துள்ளோம்.

அந்த வகையில் இம்மூன்று கலைகளும் பற்றி மூன்று பயிற்சிக் கை நூல்கள் எழுதப்படுகின்றன; அவை பூர்த்தியானதும் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளன. இரண்டாவதாக இம் மூன்று கலைகளையும் கானொளி மூலம் ஆவணப்படுத்தல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல இவை தொடர்பான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் மாவட்ட பிராந்திய மட்ட களிம்பு, கஸீதாக் குழுக்களை உருவாக்குதல் என்பனவற்றுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொவிட் சூழ்நிலை இருந்தாலும் இவற்றில் முடியுமானவற்றை இந்த வருடம் நிறைவு செய்ய ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். இதேபோல அடுத்த வருடம் ஏனைய 3 பாரம்பரிய விடயங்கள் தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்படும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா அவர்களின் தலைமையில் உப குழு அமைத்து ஏனைய சில கலைகள் தொர்டபான ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேபோல சிரேஷ்ட முஸ்லிம் எழுத்தளர்கள் 50 பேரின் சிறுகதைகள், 50 கவிதைகள் என்பன தமிழிலும் பின்னர் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு நூலாக்கம் செய்யப்படவுள்ளன.

முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் உள்ள அறக்கட்டளை நிதி மூலமும் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இன உறவுக்கு வழிகோலும் 40 ஹதீஸ்கள் தெரிவு செய்யப்பட்டு அவை சிங்கள மொழியில் நூலுருவாக்கம் செய்யப்படவுள்ளது. நூல் கொள்வனவு, இஸ்லாமிய இலக்கியத்துறை விருது வழங்குதல், இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் வெளியீடு செய்தல், சிங்கள மொழியில் இலக்கியம் படைக்கும் முஸ்லிம் எழுத்தாளர்களை ஊக்குவித்தல், விசேட தினங்கள் மற்றும் நிகழ்வுகளை மையமாக வைத்து கலாசார பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல், அறபெழுத்தணியை ஊக்குவித்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்க திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றோம்.

இளம் எழுத்தாளர்களுக்கான இணைய வழி பயிற்சிகள் சிங்களம் ஆங்கிலம். ஆகிய மொழிகளில் இடம் பெற்று வருகின்றன; தமிழ் மொழியும் விரைவில நடைபெறும்.
இவற்றுக்கு மேலாக முஸ்லிம் அல்லாதவர்களுடனான இன நல்லிணக்கத்திற்காக பள்ளிவாயல் – பன்சலைக்கு பாலம் அமைத்தல் என்ற நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து நடத்தி வருகின்றோம்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊடாக பௌத்த மதகுருக்களுக்கு தமிழ் மொழி கற்பித்தல், பௌத்த பாளி பல்கலைக்கழகம் ஊடாக மௌலவிமார்களுக்கு சிங்கள மொழி கற்பித்தல் போன்ற நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றன.” இவ்வாறு திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை பணிப்பாளர் தெளிவு படுத்தினார்.

இதனை தொடர்ந்து எழுத்தாளர் மற்றும் கலைஞர்களின் கருத்துகள் பரிமாறப் பட்டன.
இன்னும் தேவையான விடயங்களை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வட்ஸப் குழுவின் ஊடாக பரிமாறிக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 − 83 =

Back to top button
error: