crossorigin="anonymous">
உள்நாடுபொது

’13 ஆவது திருத்தத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதில் பொலிஸ் அதிகாரம் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது எந்த விதமான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு கடினமானதாக அமையலாம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதலில் ஏனைய அதிகாரங்கள் தொடர்பில் உடன்பாட்டுக்கு வந்து நாட்டின் எதிர்காலத்திற்காக 13 ஆவது திருத்தத்தை கட்டம் கட்டமாக எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

அரசியலமைப்பின் 13வது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது முன்மொழிவுகளையும் எதிர்கால திட்டங்களையும் நேற்று (09) பாராளுமன்றத்தில் முன்வைத்து விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், பாராளுமன்றம் உடன்படுமானால் மாகாண சபை தேர்தல் சட்டம் திருத்தத்திற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், மாவட்ட விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்தவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாகாண சபைகளுக்கு போட்டியிடும் உரிமையை வழங்கவும், 25% அல்லது கூடுதலான பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசாங்கத்தின் அதிகாரப் பட்டியல், மாகாண சபை அதிகாரப் பட்டியல்,ஒருங்கிணைந்த பட்டியல் ஆகியவற்றை மீள் ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் பெறப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்தோடு மாகாண சபைகள் செயற்படும் வரை மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசனை சபையொன்றை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் அரசியல் முறையில் இருந்தோ அல்லது அரசியலில் இருந்தோ அகற்ற முடியாத நிரந்தரமான காரணியாக மாகாணசபை மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொதுமக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கக் கூடிய வினைத்திறனான மற்றும் வீண்விரயமற்ற, ஊழலற்ற மாகாண சபை கட்டமைப்பொன்றை கட்டியெழுப்புவதன் ஊடாக வலுவான முறைமை மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கையை ,காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஆரம்பித்துள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்யும் நோக்கில் தரவு உள்ளீட்டை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காணமல் போனவர்களுக்காக சான்றிதழ் வழங்குவதை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை:

கௌரவ சபாநாயகர் அவர்களே,

1987ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. எமது நாட்டில் 36 வருடங்களாக மாகாண சபை முறைமை செயற்பட்டு வருகின்றது. எனினும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதம் தொடர்பில் பல சிக்கல்கள் உள்ளன. அத்துடன் மாகாண சபைகள் தொடர்பிலும் பல பிரச்சினைகள் உள்ளன.

நாம் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். எமது நாட்டின் அபிவிருத்திக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் இந்த பாராளுமன்றத்தில் நாம் அனைவரும் வெளிப்படையாகவும் நடுநிலையாகவும் ஆழமாக கலந்துரையாடிய பின்னர் ஒரு உடன்பாட்டிற்கு வந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதனால்தான் அண்மையில் சர்வகட்சி மாநாட்டை ஏற்பாடு செய்தோம்.

இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

அந்த மாநாட்டில் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக எங்களால் முழுமையான உடன்பாட்டை எட்ட முடியவில்லை. அதிகாரப் பரவலாக்கத்திற்கான ஒரு குறிப்பிட்ட தேசிய வேலைத்திட்டம் பற்றி வெளிப்படையான கருத்துக்கள் எதுவும் அங்கு முன்வைக்கப்படவில்லை. சில அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க தயங்குவதும் விருப்பமில்லாமல் இருப்பதும் தெளிவாகியது. மாநாட்டில் பங்கேற்ற சில அரசியல் கட்சிகள் அவநம்பிக்கையை மனத்தில் வைத்துக்கொண்டு இதில் பங்கேற்றன. கடந்த காலங்களில் நடந்த சில சர்வகட்சி மாநாடுகளில் அவர்கள் பெற்ற அனுபவம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இனியாவது நாம் இந்த நிலையை மாற்றுவோம். அரசின் அனைத்து செயல்பாடுகளையும் எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சியின் பங்கு என்று நினைக்கும் மரபிலிருந்து விடுபடுவோம். எதிர்கட்சிகளின் கருத்தை பொருட்படுத்தாமல் செயல்படும் வழக்கத்திலிருந்தும் விலகி இருப்போம். நாம் அனைவரும் நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் செயல்படுகிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய பாதையில் முன்னேறினால் மட்டுமே நம் நாட்டை முன்னேற்ற முடியும். அந்த புதிய பாரம்பரியத்தை உருவாக்க நாங்கள் பாடுபடுகிறோம்.

நான் எப்பொழுதும் வலியுறுத்தும் ஒரு விடயத்தை இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். கடந்த காலத்தை கிளறிக் கொண்டிருக்காமல், எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்போம். உங்களுக்கும் எனக்கும் கசப்பான அனுபவங்கள் உண்டு. அது உண்மை. ஆனால் அவற்றை பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எதிர்காலத்தைப் பற்றி ஆராய வேண்டும். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, நேர்மையான நோக்கத்துடன் ஒன்றிணைந்து பொதுவான முடிவை எடுப்போம்.

13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளை அமுல்படுத்துவதில் கடந்த 36 வருடங்களாக நாம் வெற்றி பெற்றுள்ளோமா? தோல்வியடைந்தோமா? அவ்வாறு வெற்றி பெறவோ தோல்வியடையவோ காரணங்கள் என்ன? நாம் இதைப் பற்றி பேசலாம். கலந்துரையாடுவோம். ஆழமாகப் நோக்குவோம். உலகின் புதிய போக்குகளைப் ஆராய்வோம்.

நமது பிராந்தியத்தில், இந்தியா மற்றும் சீனா போன்று மேற்கு நாடுகளான அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய பெரிய நாடுகளும் அதிகாரத்தை பரவலாக்கியுள்ளன. மேலும், பிரித்தானியா, நெதர்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளும் அதிகாரத்தை பரவலாக்கியுள்ளன.

சீனாவிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக் காட்டுகிறேன். சீனாவின் சிறுபான்மையினர் மொத்த மக்கள் தொகையில் 9 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். ஆனால் அவர்கள் இந்த சிறுபான்மையினருக்கு வலயங்கள்,கோரளைகள் மற்றும் மாநகரங்கள் போன்ற பல நிர்வாகக் கட்டமைப்புகளில் தன்னாட்சி அதிகாரங்களை வழங்கியுள்ளனர்.

தேசியக் கொள்கையின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் ஊடாக, உலகின் பல்வேறு நாடுகள் வெற்றி பெற்றுள்ளன. அந்த நாடுகளில் இருந்து படிப்பினை பெறுவோம். அதையெல்லாம் கருத்தில் கொண்டு நமது நாட்டிற்கு மிகவும் பொருத்தமான கட்டமைப்பை அடையாளம் காண்போம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

மாகாண சபைகளுக்காக வருடத்திற்கு சுமார் 550 பில்லியன் ரூபாவை செலவிடுகிறோம். இந்த பணத்திற்கு மாகாண சபைகளினால் நியாயம் நடந்துள்ளதா? இந்த பணம் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட்டதா? நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியவிடயமிது.
இலங்கையில் உள்ள ஒவ்வொருவரும் மாகாண சபையை பராமரிக்க 22,000 ரூபாவை செலவிடுகின்றனர். நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒரு மாகாண சபையை பராமரிக்க 88,000 ரூபாவை செலவிடுகிறது. அந்த பணத்திற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு பலன்கள் கிடைக்கிறதா? பல்வேறு அரசாங்கங்கள், பல நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்காக மாகாண சபை முறையை ஒழிக்க முடியாது

மாகாண சபைகளுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இடையே உள்ள அதிகாரம் குறித்து தனித்தனியாக தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே, மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான விடயதானங்கள் பொருந்தாமல் இருக்கிறது. பணியாற்றும் போது ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள். ஒரே பணி இரண்டு இடங்களில் செய்யப்படுகிறது. பணிகள் தாமதமாகிறன. மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு பதிலாக வளர்ந்து வருகின்றன.

இவ்வாறான காரணங்களினால், மாகாண சபைகளை வெள்ளை யானைகள் என்று கூறும் நபர்களும் நாட்டில் இருக்கின்றார்கள்.

எவ்வாறாயினும், அந்த அனைத்து குறைபாடுகளுக்கும் பலவீனங்களுக்கும் மத்தியில், மாகாண சபைகளை இலங்கையின் அரசியல் பாதையில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்திய கட்டமைப்பு என்று அழைக்கலாம். மாகாண சபைகள் திறமையான அரசியல் தலைவர்களை உருவாக்கும் மேடையாகவும் நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்றத்திற்கான நுழைவாயிலாகவும் மாறியுள்ளது. கடந்த காலங்களில் மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த பலர் நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் ஏனைய பொறுப்பான பதவிகளை வகித்த பல சந்தர்ப்பங்களை நாம் காண முடியும். இன்று இந்த சபையில் அமர்ந்துள்ள அமைச்சர்களில் அநேகர், மாகாண சபை உறுப்பினர் பதவி முதல் முதலமைச்சர் பதவி வரை பல்வேறு பதவிகளை வகித்துள்ளனர்.

மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, சில அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. சில கட்சிகள் ஜனநாயக முறையிலும், சில கட்சிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் எதிர்ப்பு தெரிவித்தன. பல உயிர்கள் பலியாகின. நாட்டின் சொத்துக்களும் தேசிய வளங்களும் எரிக்கப்பட்டன. அது கடந்த காலம். ஆனால் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் எவையும், மாகாண சபைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. அந்த அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் மாகாண சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

இங்கு இன்னொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். மாகாண சபை அதிகாரப் பகிர்வு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இந்த நாட்டின் அதியுயர் சட்டமாகும். அதை நாம் புறக்கணிக்க முடியாது. நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்றமும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான எனது முன்மொழிவுகளையும் எதிர்கால திட்டங்களையும் நான் இந்த சபையில் முன்வைக்கிறேன். அந்த பரிந்துரைகளை ஆழமாக ஆராயுங்கள். உங்கள் யோசனைகளை சமர்ப்பிக்கலாம். அந்தக் கருத்துக்கள் அனைத்தையும் ஆராய்ந்து, மாகாண சபைகளின் வகிபாகம் மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்து இறுதித் தீர்மானத்தை எட்ட வேண்டிய பொறுப்பு முழுவதுமாக இந்த கௌரவ சபையையே சாரும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

முன்னேற்றகரமான ஜனநாயக நாடுகளில் புதிய போக்கு என்ன? மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்கு பதிலாக பரவலாக்கப்பட்ட நிர்வாகத்தை உருவாக்குதல். அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார விடயங்கள் மக்களுக்கு நெருக்கமாக இருக்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கம். இதற்காக, உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதிகாரப் பரவலாக்கம் என்பது நேரடி ஜனநாயகத்தை அணுகுவதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

அனைத்து மக்களும் ஒன்றுகூடி முடிவெடுக்கும் நேரடி ஜனநாயகத்திற்குச் செல்லும் எந்த ஆட்சி முறையாலும் இயலாது. ஆனால் அரசியல், பொருளாதார மற்றும் சமூக செயல்பாட்டில் மக்களின் பங்கேற்பையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்க முடியும். மாகாண சபை முறைமை என்பது அதிகாரத்தை மக்களிடம் கொண்டு செல்லும் கட்டமைப்பாகும்.

அதுமட்டுமல்லாமல், அதிகாரத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பல வழிமுறைகளை அண்மைக்காலமாக ஆரம்பித்துள்ளோம். துறைசார் குழுக்கள் பலப்படுத்தப்படுத்தி, இதில் இளைஞர்களை இந்த நோக்கத்திற்காகவே இணைத்துக் கொண்டோம். மேலும், அடிமட்ட அளவில் மக்கள் ஆட்சியில் பங்கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள் சபைகளை நிறுவதற்கு நாம் பணியாற்றி வருகிறோம். ஜனசபை செயலகத்தை ஆரம்பித்தோம். மாதிரி சட்டசபைகள் அமைக்கப்பட்ட பின்னர், சட்டசபை சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்.

இந்தப் பின்னணியில் மாகாண சபைகள் ஊடாக மக்களுக்கு அதிக அதிகாரத்தை கொண்டு செல்லும் வழிமுறைகளையும் திட்டங்களையும் தயாரிக்க வேண்டும் என நான் கருதுகின்றேன். அப்போதுதான் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நிறுவனமாக மாகாண சபைகளைப் பயன்படுத்த முடியும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

கடந்த சில வருடங்களாக பாராளுமன்றத்தின் பல்வேறு குழுக்கள், மாகாண சபைகள் மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்து ஆழமாக பரிசீலிக்கப்பட்ட பல ஆவணங்களை வெளியிட்டுள்ளன. அதில் ஒன்று எனது தலைமையிலான இலங்கை அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவால் 2017 செப்டெம்பர் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையாகும். இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளுக்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

அரசியலமைப்பின் 3, 4 மற்றும் 5 ஆகிய பிரிவுகளில் திருத்தம் செய்வது குறித்த பரிந்துரைகள் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தேச அரசியலமைப்பு திருத்தங்களை நாங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கிறோம்.

பின்வரும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. மாகாண பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பான தேசிய கொள்கைகளை வகுப்பதில் மாகாண சபைகளின் பங்களிப்பைப் பெறுதல்.

2. மாகாண பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பான தேசியக் கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் மத்திய அரசாங்கத்திற்கு பரவலாக்கப்பட்ட அதிகாரங்களை கையேற்பது அல்லது மாகாண சபையால் செயல்படுத்தப்படும் நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது.

3. மேற்படி பரவலாக்கப்பட்ட விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மாகாண சபைகளிடமே இருக்கும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

இடைக்கால அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜாதிக்க ஹெல உறுமய, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகியோர் ஆவணங்களை சமர்ப்பித்தனர். அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் மத்திய சுற்றயக் கூறு தொடர்புகள் பற்றிய உபகுழுவின் அறிக்கை என்பன குறித்தும் கவனத்திற்குக் கொள்ள வேண்டும்.

இந்த அனைத்து ஆவணங்களின் ஊடாகவும், மாகாண சபை முறைமை எமது ஆட்சி கட்டமைப்பில் இருந்து அகற்றப்பட முடியாத ஒரு நிறுவன கட்டமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வாகவோ அல்லது அதிகாரப் பரவலாக்கல் அலகாகவோ மாகாண சபைகளை ஏற்காத மக்கள் விடுதலை முன்னணியும் ஜாதிக்க ஹெல உறுமயவும் கூட மாகாண சபை முறைமையில் திருத்தப்பட வேண்டிய விடயங்களும் திருத்தப்படக்கூடாத விடயங்களும் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளன.

இவையனைத்தின் ஊடாகவும் மாகாண சபையானது இலங்கையின் ஆட்சி முறையில் இருந்தும் அரசியலில் இருந்தும் அகற்ற முடியாத ஒரு நிலையான காரணியாக மாறியுள்ளது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடிந்தால், தேசிய அடையாளத்தைப் பாதுகாத்து ஒரே தேசமாக எழுச்சி பெறவும், நாட்டின் அதிகாரத்தை மக்களிடம் நெருங்கிச் செல்லும் வகையில் பரவலாக்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். மாகாண சபை முறைமை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமன்றி ஒன்பது மாகாணங்களிலும் நிறுவப்பட்டன.

மாகாண சபைகளை சரியான பாதையில் வழிநடத்துவதன் மூலம் தேசிய ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுகிறது. மறுபுறம், இது மிகவும் திறமையான மற்றும் அதிக சேவை வழங்கும் நிறுவன கட்டமைப்பாக உறுதிப்படுத்த முடியும். பொது மக்களுக்கு நெருக்கமான வகையில் அதிகாரப் பரவலாக்கத்திற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே, மாகாண சபை முறைமையை பொதுமக்களுக்கு ஏற்ற, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும், நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் நிறுவனமாக மேம்படுத்துவதே எமது முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

இதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கும் வகையில், பல சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் முன்வைக்கவும், பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நான் முன்மொழிகிறேன்.

1. பிரதேச செயலாளர்கள் நியமனம்
2. கல்வி தொடர்பான சேவைகளை நடைமுறைப்படுத்த தேவையான அதிகாரத்தை மாகாண சபைக்கு வழங்குதல்.
மாகாண சபை பட்டியல் அட்டவணை 3, உப ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைக் கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் செயற்படுத்துதல்.
3. தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளுக்காக மாகாண மட்டத்தில் சபைகளை நிறுவுதல்
4. பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரமளித்தல்
5. விவசாயப் புத்தாக்கம் மற்றும் கீழ் மட்டத்திலான அனைத்து விவசாய சேவைகளையும் வழங்க மாகாண சபைகளுக்கு அதிகாரமளித்தல்
6. மாகாண சுற்றுலா மேம்பாட்டு சபைகளை நிறுவுதல்
7. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கைத்தொழில்கள் தொடர்பான வரையறையை ரூ. 4 மில்லியனில் இருந்து ரூ. 250 மில்லியனாக உயர்த்த கைத்தொழில்கள் சட்டத்தில் திருத்தங்களைச் சேர்த்தல்
இந்த பாராளுமன்றம் உடன்படுமாக இருந்தால், இந்த எல்லையை ரூ. 500 மில்லியனாக உயர்த்த தயாராக உள்ளோம்.
8. மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட சில பணிகள் இன்னமும் மத்திய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதால் அந்த தவறை திருத்துதல்
9. 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி மாவட்ட அபிவிருத்தி சபைகளை நிறுவுதல்

மத்திய அரசாங்கத்தின் தேசிய கொள்கைகளுக்கு அமைவாக ஒவ்வொரு மாகாண சபைகளும் மூன்று வருட அபிவிருத்தி திட்டத்தை தயாரித்தல். மத்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்களும் அந்தந்த அதிகார எல்லைகளுக்கு ஏற்ற வகையில் இந்தத் திட்டத்திற்குள் உள்வாங்க வேண்டும்.

இந்த மூன்றாண்டு திட்டத்தை மாவட்ட அபிவிருத்தி சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பை மாகாண சபைகளுக்கு வழங்குதல்.

ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இப்பணியில் இணைந்து செயற்படக்கூடிய சட்டரீதியான சூழலை தயார்படுத்துதல்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

தற்போது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசாங்கத்தின் அதிகாரப் பட்டியல், மாகாண சபை அதிகாரப் பட்டியல், ஒருங்கிணைந்த பட்டியல் ஆகியவற்றை மீளாய்வு செய்து, தேவையான திருத்தங்களைச் சமர்ப்பிக்க பிரதமர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவும் பெறப்படும்.

1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாணசபைச் சட்டத்தில் மாகாண சபை அமைச்சரின் பொறுப்புகள், மாகாண அமைச்சு செயலாளரின் பொறுப்புகள் மற்றும் ஏனைய அதிகாரிகளின் பொறுப்புகள் குறித்து குறிப்பாக வரையறுக்கப்படவில்லை. அதன் காரணமாக சில தவறான புரிதல்களும், பிரச்சினைகளும், குழப்பங்களும் ஏற்படுகின்றன. எனவே அவர்களின் அதிகாரங்கள் குறிப்பிடப்படும் வகையில் மாகாண சபைச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

மாகாண சபைகள் தொடர்பான இந்த சட்டங்களை திருத்தியமைத்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், பாராளுமன்றம் சம்மதிக்கும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தயாராக உள்ளோம்.

தற்போது, இது தொடர்பாக மூன்று முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

1. மாவட்ட விகிதாசார முறையின் கீழ் தேர்தல் நடத்துதல்
2. மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்குதல்
3. பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25% அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்துதல்
இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுப்போம்.

மாகாண சபைகள் செயற்படும் வரை மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஆலோசனை சபையொன்றை நியமிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக; மாகாண மேற்பார்வைக் குழுத் தலைவர் அல்லது பிரதானிகள், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் மாகாணத்தில் உள்ள அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம்.

மேலும், சட்டம் இயற்ற மற்றொரு குழுவை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். ஆலோசனைக் குழுவின் அனுமதியைப் பெற்ற பிறகு வரைவு சட்டங்களை சட்டமாக்குவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

ஆளுநரும் , பெயரிடப்படும் பாராளுமன்ற உறுப்பினரும் இந்த ஆலோசனை சபைக்கு இணைத்தலைவராக இருக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் தொடர்பான விடயங்கள் ஆராயப்படும் போது ஆளுநர் தலைமை தாங்குவார். சட்டவாக்க விவகாரங்கள் ஆராயப்படும் போது பாராளுமன்ற உறுப்பினர் தலைமை தாங்குவார்.

தற்போது 45 மாகாண சபை அமைச்சுக்கள் செயற்படுகின்றன. இந்த அமைச்சுக்களுக்கு கண்காணிப்புக் குழுக்களை நியமித்து, வேறு பொறுப்புகள் வழங்கப்படாத பாராளுமன்ற உறுப்பினர்களை தலைவர்களாக நியமிக்கலாம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதில் பொலிஸ் அதிகாரங்கள் மிகவும் உணர்வுபூர்வமான விடயமாக மாறியுள்ளது. எனவே ஏனைய அதிகாரங்கள் தொடர்பில் முதலில் நாம் உடன்பாட்டிற்கு வருவது மிகவும் நடைமுறைச்சாத்தியமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.நாம் கட்டம் கட்டமாக இதனை தொடரலாம். உணர்வுபூர்வமான விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால், எந்த ஒருமித்த கருத்தையும் அடைவது கடினமாக இருக்கலாம். நாம் இறுதியில் இருந்து தொடங்காமல் ஆரம்பத்திலிருந்து தொடங்குவோம்.

எனவே முதலில் ஏனைய அதிகாரங்களை பரவலாக்குவது பற்றி பேசி, பொதுவான உடன்பாட்டை எட்டுவோம். அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான தென் பகுதி முதலமைச்சர்களின் அறிக்கையையும் நாம் அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம்.

அனைத்து விடயங்களையும் பொது உடன்படிக்கையுடன் செய்வோம். நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து பொதுவான முடிவுகளை எடுக்கும் பலமும் புத்தியும் இந்த பாராளுமன்றத்திற்கு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவோம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி, நாட்டிற்குள் நிலையான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இலங்கையின் அபிவிருத்திக்கு நல்லிணக்கம் அத்தியாவசியமானது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிக்களுடன் அதுதொடர்பில் கலந்துரையாடலை நடத்தியிருந்தேன்.

அந்த சந்திப்பு தொடர்பில் சபையிலிருக்கும் உறுப்பினர்களை தெளிவுபடுத்த வேண்டியது எனது கடமையாகும். அது உத்தேச பயணத்திற்கான தடமாகும் என்ற வகையில் அரசாங்கம் அதனூடாக முன்னேறிச் செல்ல எதிர்பார்க்கிறது. அந்த வகையில் தேசிய நல்லிணக்கத்திற்கு அவசியமான விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம்

இந்த சட்டமூலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலான யோசனைகள் குறித்து கலந்தாலோசித்து இணக்கப்பாடுகளை எட்டிய பின்னர், அமைச்சரவை அனுமதிக்காக சமர்பிக்கப்படவுள்ளது. உரிய நடவடிக்கைகளின் பின்னர் சட்டமூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்படும்.

உண்மையை கண்டறிவதற்கான பொறிமுறை மற்றும் சட்டமூலம்

உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்திற்கு பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் மற்றும் கொள்கை, மக்கள் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன. இது தொடர்பிலான சட்டம் தயாரிக்கப்பட்ட பின்னர் உரிய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும். குறிப்பாக பங்குதாரர்களுக்கான ஆலோசனைகள், வழிக்காட்டல்கள் மற்றும் கொள்கை தயாரிப்புக்கான செயலகத்தை நடைமுறைப்படுத்தவதற்கான பிரதம நிறைவேற்று அதிகாரிகள் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

ஐ.நா பிரதிநிதிகள் உட்பட சிவில் சமூகப் செயற்பாட்டாளர்களின் பரிந்துரைகள் தொடர்ச்சியான மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அந்தச் செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன் அமைச்சரவையின் அனுமதிக்கான சட்ட வரைவு சமர்ப்பிக்கப்படும்.

தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) சட்டமூலம்

ONUR சட்ட வரைவு அரசியலமைப்பிற்கு ஏற்புடையதா என்பதை அறிய சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேலும், ONUR இனால் தயாரிக்கப்பட்ட நல்லிணக்கத்திற்கான தேசிய செயற்திட்டம் எதிர்வரும் காலங்களில் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும்.

நட்டயீட்டுக்கான அலுவலகம்

யுத்தத்தில் காணாமல் போன வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த 203 பேருக்கு ஜூலை 2023 ஆம் ஆண்டு வரை 40.6 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதோடு இந்தசெயல்முறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் (OMP)

வடக்கு கிழக்கு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். OMP க்கு கிடைத்த 21,374 முறைப்பாடுகளில், 3,462 மீதான விசாரணைகள் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது முழுமையாகச் செயற்பட ஆரம்பித்த பின்னர் அந்த பணிகளை துரிதப்படுத்த முடியும். காணாமல் போனோர் தொடர்பான தகவல்களைக் கோருபவர்கள் இடைக்காலச் செயலகத்தில் விரிவான தகவல்களைச் சமர்ப்பிப்பது சிறந்தது.

OMP காணாமல் போனவர்கள் தொடர்பிலான தேடுதல்களை ஆரம்பித்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் தரவு உள்ளீடு செயற்பாடுகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் காணமல் போனது தொடர்பில் சான்றிதழ்களை வழங்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. OMP மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள கொள்கைகளுக்கமைவாக வழக்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் OMP க்கு கிடைக்கும் முறைப்பாடுகளை திறம்பட முகாமைத்துவம் செய்வதற்கான வழிக்காட்டல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்காக அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், OMP ஆனது 24 புதிய சபைகளை உள்ளடக்கியிருக்கும் என்பதோடு, ஓகஸ்ட் அதன் பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பரிந்துரை சேவைகளுக்காக மாவட்டத்திற்கு ஒரு உதவிக் குழு வீதம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

நட்டயீடு மற்றும் காணாமல் போனோர் அலுவலுடன் தொடர்புடைய பிரச்சினைகளை முன்வைப்பதற்கான முழுமையான சுதந்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. OMP தற்போதும் தமது வேலைத்திட்டத்திற்கு அமைவாக நேர வரைவை தயாரித்துள்ளது.

எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு பொது மன்னிப்பு

விளக்கமறியல் இடப்பட்டவர்கள் 21, மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவர்,சிறைதண்டனைக் கைதிகள் 22 பேர், உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கைதிகள் உள்ளனர். அரசியலமைப்பின் 34(1) சரத்துக்கமைய இறுதி இரண்டு பிரிவுகளிலுமுள்ள கைதிகளுக்கு மாத்திரம் பொது மன்னிப்பு வழங்குதல் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. அந்த பரிந்துரைகளை கருத்திற் கொண்டு எஞ்சியுள்ள சிறைத் தண்டனைகளை நிறைவு செய்து, 11 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சருக்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளது.

தேசிய காணி ஆணைக்குழுவை நிறுவுதல்

தேசிய காணி ஆணைக்குழு, (NLC) மற்றும் தேசிய காணிக் கொள்கையை விரைவாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கைவிடப்பட்ட அரச காணிகளை பிறருக்கு வழங்குவது தொடர்பாக தேசிய காணி ஆணைக்குழு கொள்கை வரைவை (NLC) தயாரித்துள்ளது. அதுகுறித்த மேலதிக ஆய்வுகளையும் முன்னெடுத்து வருகிறது. காணி ஆணைக்குழுச் சட்டமொன்றையும் செப்டெம்பர் மாதத்துக்குள் (NLC) வழிகாட்டலுக்காக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. 9 மாகாண பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் 12 பேரை உள்ளடக்கியதாக (NLC)யின் கட்மைமைப்பை மாற்றியமைக்கவும் எதிர்பார்க்கப்படவுள்ளது.

காணி பிரச்சினை தொடர்பிலான யோசனைகள்

விசேட குழுவொன்று 2020 ஆம் ஆண்டில் அநாவசியமான வனப்பகுதிகளை விடுவிப்பது தொடர்பிலான தடையுத்தரவொன்றை உயர் நீதிமன்றத்திடமிருந்து பெற்றுக்கொண்டிருந்ததை குறிப்பிட முடியும். அதன் பின்னர் இவ்வருடத்தின் மே மாதத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பலனாக 1985 காணி பயன்பாடு தொடர்பிலான வரைவுக்கமையவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு பிரதேசங்களை எல்லை நிர்ணயம் செய்யும் இயலுமை தொடர்பிலும் கோரப்பட்டிருந்தது.

இதன் பலனாக, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அந்த வனப் பிரதேசங்களை விடுவிப்பதற்கு அமைச்சுக் குழு ஒன்றின் ஊடாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்படி தடை உத்தரவை நீக்கிக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, வடக்கு கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் மேற்படி காணிப் பயன்பாட்டு வரைபடங்கள், தற்போதைய காணி பாவனை முறைகள் மற்றும் பிரதேச செயலாளர்களின் முன்மொழிவுகளை மையப்படுத்தி தரவுக் கட்டமைப்பொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு உரிய தகவல்களை பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னைய தடை உத்தரவை நீக்கிக்கொண்ட பின்னர் பிரதேச செயலாளர் அலுவலக மட்டத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனைகள் அமைச்சுக் குழுக்களினால் ஆராயப்படவுள்ளது. ஜனாதிபதி செயலாளரின் தலைமையிலான குழுவொன்றினால் காணி தொடர்பிலான பிரச்சினைகள் ஆராயப்படும்.

தேசிய தொல்பொருள் திட்டமிடல்

நாடு முழுவதிலும் தேசிய திட்டத்தின் கீழ் காணி எல்லை நிர்ணயம் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தொல்பொருள் திணைக்களத்திற்கும் மத்திய கலாசார நிதியத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள், இடங்களை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பனவற்றை முதன்மைப்படுத்தி திட்டமிடுமாறு தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளை அடையாளம் காண்பதற்கு அல்லது முறையாக கையகப்படுத்துவதற்கு தேவையான செயல் திட்டம் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்மொழியப்படும்.

தென் இந்தியாவின் புனர்வாழ்வு முகாம்களில் வாழும் இலங்கையர்களுக்கு அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுகளை பெற்றுக்கொடுப்பதற்கான வரைபடம்.

தென்னிந்திய புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் 2,678 இலங்கையர்களின் பட்டியல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது. மேற்கூறிய எண்ணிக்கையில், இலங்கையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை இரண்டையும் வைத்திருப்பவர்களுக்கு அனைத்து நாடுகளுமான கடவுச்சீட்டுகளை வழங்க முடியும். அந்த ஆவணங்களை வழங்குவதற்கான கால அவகாசம் இரண்டு முதல் நான்கு வாரங்களாகும். தென்னிந்தியாவில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு வழங்குவது குறித்து பரிசீலிப்பதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்தல்

வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கின் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர் அல்லது அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாழ்ந்தனர். இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர், அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான மக்களை வீடு மற்றும் வாழ்வாதார உதவிகளுடன் மீள்குடியேற்றியதன் பின்னரான நிலைமை தொடர்பிலான விவரங்கள் சபையில் சமர்பிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள் குடியமர்த்தும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்தவர்களை மாத்திரமே குடியமர்த்த வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் 15 நலன்புரி நிலையங்கள் உள்ளன. அவற்றில் 136 குடும்பங்கள் உள்ளன. அத்தோடு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வசிக்கும் 2,175 குடும்பங்கள் உள்ளன. கிளிநொச்சி நலன்புரி நிலையங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இல்லை. எவ்வாறாயினும் யாழ். குடாநாட்டில் 182 குடும்பங்கள் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வசிப்பதோடு, பச்சிலைப்பள்ளி பிரிவில் 177 குடும்பங்கள் உள்ளன.

கிழக்கு மாகாணத்தின், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மாத்திரமே இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கின்ற நிலையில் அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வசிக்கின்றனர். அங்கு நலன்புரி நிலையங்கள் எவையும் கிடையாது. இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் குடியமர்த்துவது தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டிய அதேநேரம், அதற்காக தனியார் பகுதிகளை பொதுப் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முறைமையொன்றை தயாரித்து பிரச்சினைக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முப்படைகளினால் விடுவிக்கப்படவுள்ள காணிகள் – வடக்கு மாகாணம்

யாழ்ப்பாணத்தின் முழுமையான நிலப்பகுதி 253,283 ஏக்கர்களாக காணப்படுவதோடு, 2009 ஆம் ஆண்டில் பாதுகாப்பு படையினரால் 26,812 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டிருந்தது. 2009 இல் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளில் 90% – 92% வரையிலான காணிகள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய 817 ஏக்கர் அரச காணி, 22,101 தனியார் காணி உள்ளடங்களாக 22,919 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாரினால் கையப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காணப்படும் காணியின் அளவு 3754 ஏக்கராகும் என்பதோடு, அவற்றில் 862 – 2892 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் உள்ளன.

கீழ்வரும் பிரிவுகள் ஊடாக காணிகளை விடுவிக்க எதிர்பார்க்கப்படுகிறது:

(i) இராணுவம் மற்றும் கடற்படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் 1.4 ஏக்கர், கிளிநொச்சியில் 13 ஏக்கர் மற்றும் முல்லைத்தீவில் 20 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளன.

(ii) யாழ்ப்பாணத்தில் 3 – 6 மாதங்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் இராணுவத்தினால் அடையாளங் காணப்பட்டுள்ளது.

(iii) பலாலி இராணுவ முகாமில் இருந்து சுமார் 290 ஏக்கர் காணி விவசாயம் மற்றும் பருவகால பயிர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தற்காலிகமாக விடுவிப்பதற்கப்படவுள்ளது.

(iv) இராணுவத் தளபதியின் பணிப்புரையின் பேரில் வடமாகாணத்தில் தற்போதும் விடுவிக்க முடியாத காணிகளை விடுவிப்பது தொடர்பிலான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

இது வடக்கு மக்களிடத்தில் கருத்து வேறுபாடுகளை தோற்றுவிக்கும் விவகாரம் என்பதை நான் அறிவேன். அந்த வகையில் மேற்படி மாகாணத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட மக்கள் காணிகளை முடிந்த வரையில் விடுப்பதே எனது நோக்கமாகும்.
வடக்கு கிழக்கு அபிவிருத்து திட்டம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கு விரிவான மற்றும் நடைமுறைத் திட்டங்களை உருவாக்குவது அவசியமாகும். 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் தேசிய மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பச்சை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா உற்பத்தி மூலம் பிராந்தியத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனைப் பயன்படுத்துவதே வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களின் முதன்மை நோக்கங்களாகும். இந்த மூலோபாயம் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் கொழும்பு, பூநகரி மற்றும் திருகோணமலை துறைமுகங்களை பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி மையங்களாக மாற்றுவதும் அவற்றின் நோக்கமாக காணப்படுகிறது.

இந்த துறையில் கூட்டு முயற்சிகளை எளிதாக்க இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு சூரிய மற்றும் காற்றாலை சக்திக்கான முதலீடு மற்றும் ஏற்றுமதிக்கு சாதகமான சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய அதானி குழுமம் முன்வந்துள்ளது. கூட்டு அணுகுமுறை இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன். கூடுதலாக, “வடக்கிற்கு நீர்” திட்டம் பல்வேறு நீர்வளங்களின் வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், பூநகரி ஏரி மற்றும் மல்வத்து ஓயாவின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணக் குளத்திற்கு நன்னீர் கொண்டு வருவதற்கும் இரணைமடு குளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும் யாழ்ப்பாணத்திற்கான கங்கை தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. சிறிய ஏரிகளை புதுப்பிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவது முக்கியம். இத்திட்டம் வடமாகாணத்தில் விவசாயம் மற்றும் சூரிய சக்தி துறைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

வடக்கில் வான்வழி மற்றும் கடல்வழி தொடர்பாடல்களை மேம்படுத்துவதும் அவசியம். காங்கேசன்துறை துறைமுகம், வவுனியா மற்றும் பலாலி விமான நிலையங்களின் அபிவிருத்தி மற்றும் வடக்கிலிருந்து இந்தியாவின் தெற்கை இணைக்கும் படகு சேவைகளுக்கான வசதிகளும் உருவாகும்.

காங்கேசன்துறை துறைமுகம், பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் அமைக்கப்படுகின்றன. மன்னார் கோட்டை, காங்கேசன்துறை துறைமுகம், தீவுகள் மற்றும் வடமராச்சி ஆகிய பகுதிகளை சுற்றி சுற்றுலா படகு சவாரி திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வன்னியில் தென்னைச் செய்கையை ஊக்குவிக்க முயற்சிக்கின்றோம். யாழ்ப்பாணப் பல்கலைக்க வளாகம் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் இடமாக இருப்பதால், அது ஒரு பல்கலைக்கழக நகரமாக வளர்ச்சியடைவதற்கான சாத்தியம் உள்ளது. அதற்கு மேலதிகமாக SLIIT இன் உதவியுடன் காங்கேசன்துறையில் மற்றுமொரு வளாகத்தை நிறுவுவதற்கான காணியும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தை திருகோணமலையை மையப்படுத்தி அபிவிருத்தி செய்யும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எமது அண்டை நாடான இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்து வருகிறது. தொழிற்துறை, வலுசக்தி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் தேசிய மற்றும் பிராந்திய மையமாக திருகோணமலையை மேலும் மேம்படுத்துவதற்கான இந்தியாவின் ஒப்பந்தம் மற்றும் திருகோணமலையில் எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வதில் தொடர்ந்து ஒத்துழைப்பது மேலும் பல நன்மை அளிக்கும். கிழக்கு மாகாணம் கடல் விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. திருகோணமலை ஒரு முக்கிய மூலோபாய துறைமுகமாக மாற்றப்பட வேண்டும். கிழக்கு மாகாண துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் பிராந்தியத்தில் பல வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதும் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதும் முக்கியமானதாகும்.

இத்துறைமுகத்தின் பொருளாதார செயற்பாடுகள் திருகோணமலை மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட முடியாது. இது அனுராதபுரம், வவுனியா மற்றும் தம்புள்ளை நகரங்களுடன் இணைக்கப்பட வேண்டும், குறிப்பாக வன்னி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் விவசாய உற்பத்தியின் பெரும்பகுதிக்கு பொறுப்பான மாவட்டங்கள். இந்த மாகாணத்தில் தொழில் வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் இருப்பதால், ஒரு தொழிற்சாலை வலயம் உருவாக்கப்பட வேண்டும். எனவே, துறைமுகமும் இணைக்கப்படும், அதற்காக கூட்டு பணிக்குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

பொருளாதார அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக பல்வேறு விடயங்களை குறிப்பிட முடியும். குறிப்பாக,
கிழக்கு மாகாணத்திற்கு அருகாமையில் அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் தம்புள்ளை கலாச்சார முக்கோணம் அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு, அறுகம்பே மற்றும் திருகோணமலை கடற்கரைகளுக்கு சுற்றுலா மேம்பாட்டுக்கு வழிவகுக்கும். வெருகல் – அறுகம்பே வரையிலான கடற்கரை அபிவிருத்தி திட்டமான சுபானா ஜூரோங் திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

குரூஸ் சுற்றுலா முயற்சிகளும் இந்த வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். கிழக்கு மாகாணத்தில் மீன்பிடி, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகள் நவீனமயமாக்கலுக்கு தயாராக உள்ளன. இந்த நிலையில், மகாவலி தெற்கு கரையில் A மற்றும் B வலயங்கள் திறக்கப்படுவது விவசாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

நாடு மூன்றாம் தரப்புக்கு விற்கப்படுகிறது என்ற தவறான எண்ணத்தை கொண்டிருக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும்போது, எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்ற இலங்கையின் அனுபவத்தை புரிந்துகொள்வார்கள். நமது அயல் நாடான இந்தியாவுடன் வலுவான உறவில் பேணுவதால்,எமது இயலுமையை மேலும் பலப்படுத்தும். இந்த நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களில் நான் ஈடுபடமாட்டேன் என உறுதியளித்திருக்கும் நிலையில், நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும் என்ற நிலைப்பாட்டிலிருந்து அனைவரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

சரிந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கடினமான காலகட்டத்தை இன்று நாம் கடந்து கொண்டிருக்கிறோம். விரைவான பொருளாதார வளர்ச்சியை நாம் அடைய வேண்டிய தருணம் இது. தற்போதைய மாகாண சபை முறைமையில் இவ்வாறான விரைவான அபிவிருத்திக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன. 1977 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் கீழ் எமது நாடு விரைவான பொருளாதார அபிவிருத்தியை அடைந்தது. ஆனால் யுத்தம் காரணமாக அந்த அபிவிருத்தி தடைப்பட்டது. இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் போரினால் பாதிப்பை எதிர்கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் யுத்த நடவடிக்கைகளில் நிறைவை காண முடிந்தது. தற்போது யுத்தம் முடிவுற்று 14 வருடங்களாகிறது. ஆனால் அதிகார பகிர்வு மற்றும் மாகாண சபை பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் இயலுமை எமக்கு கிட்டவில்லை.

எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே தேசமாகச் செயற்படுவோம். நமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும். வேறு எந்த நாடும் அல்லது வெளி தரப்பினால் நமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொண்டு மீண்டும் விரைவான அபிவிருத்தி பாதையை யோசனைக்கு பயணிப்போம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

நான் ஜனாதிபதியாக பதவியேற்று கடந்த ஒரு வருட காலப்பகுதியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், பொறுப்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல முறைமை மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு வேறு எந்தக் கட்சியிடமிருந்தும் வலுவான செல்வாக்கு செலுத்தாத நிலையில், 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நான் இந்த சபையில் முன்வைத்தேன். அது நிறைவேற்றப்பட்டது. அதனால், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

தேர்தலின் போது நடக்கும் பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் ஏனைய விடயங்களைத் தடுக்கும் வகையில் தேர்தல் செலவுக் கட்டுப்பாட்டுச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

நமது நாட்டிற்கு பெரும் இடையூறாக மாறியுள்ள ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுக்க பலவீனமான சட்டமே காணப்படுகிறது. மிகவும் வலிமையான, சர்வதேச தரத்துக்கு ஏற்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்தை சபையில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளோம்.

அரசாங்கங்களின் தேவைகளுக்கேற்ப நாட்டின் நிதிக் கட்டுப்பாட்டை நினைத்தவாறு மேற்கொள்வதைத் தடுப்பதற்காக மத்திய வங்கி சுயாதீன சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இளைஞர் போராட்டங்களில், முறைமை மாற்றம் தேவை என்று வலுவாக வலியுறுத்தப்பட்டது. நமது நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களும் இந்த முறைமை மாற்ற வேண்டும் என்று கோருகின்றனர். நான் முன்பு குறிப்பிட்ட அனைத்து முன்னெடுப்புகளையும் நாங்கள் முறைமை மாற்றத்திற்கு அடித்தளமாகவே தொடங்கினோம். மாகாண சபைகளிலும் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

வினைத்திறன் மிக்க, விரயமற்ற, ஊழலற்ற, பொதுமக்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய, பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் மாகாண சபை முறைமையைக் கட்டியெழுப்புவதற்கு வலுவான முறைமை மாற்றத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது. மக்களை அதிகளவில் ஒருங்கிணைக்கவும் தேசிய ஐக்கியத்தை பலப்படுத்தவும் மாகாண சபைகளைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

இது தொடர்பான எனது முன்மொழிவுகள் மற்றும் வழிமுறைகளை நான் முன்வைத்துள்ளேன். இதனை ஆழமாக ஆராய்ந்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.

இதனை தொடர்வதற்கான முழு அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உள்ளது. பொது உடன்பாட்டின் மூலம் அந்த நடவடிக்கையை எடுக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்த பாராளுமன்றத்திற்கு பலமும் பரந்த அறிவும் உள்ளது என்பதை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு இந்த கௌரவ சபையிடம் கேட்டுக்கொள்கிறேன்.எனவும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றும்போது தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 6

Back to top button
error: