crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுப்பு

மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனைகளுக்காக இன்று (21) மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.

கடந்த 03 ஆம் திகதி இரவு இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்த சந்திரன் விதுசன் என்னும் இளைஞன் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் மறுதினம் சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த இளைஞனின் மரணத்தில் உறவினர்களினால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது 4 பக்கட்டுக்களை கொண்ட ஜஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் அது நெஞ்சுப் பகுதியில் ஜஸ் போதைப் பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தனது மகன் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் அவரது கைகள் பின் புறமாக விலங்கிடப்பட்ட நிலையில் அவர் போதைப் பொருளை விழுங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லையெனவும் பொலிஸாரின் தாக்குதலில்தான் தமது மகன் உயிரிழந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துவந்தனர்.

இது தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்படவேண்டும் என்று கோரி மட்டக்களப்பு நீதிவான் நீதமன்றில் கோரப்பட்டிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரனி கனகரத்தினம் சுகாஸ் இது தொடர்பான கோரிக்கையினை முன்வைத்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இளைஞனின் சடலத்தினை நீதிபதி முன்னிலையில் தோண்டியெடுத்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்குமான உத்தரவு வழங்கப்பட்டது.

அதற்கு அமைவாக இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் பொலன்நறுவை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.எம்.எச்.பெரேரா, பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் சரத்சந்திர கொபுஹார ஆகியோர் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த குறித்த சடலம் தோண்டியெடுக்கப்பட்டதுடன் குறித்த சடலம் பேராதனை பல்கலைக்கழக பேராசியரியர் முன்னிலையில் பிரேத பரிசோதனைகள் நடாத்துவதற்கு கொண்டுசெல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 3

Back to top button
error: