crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கான கடன் வசதிக்கு IMF செயற்குழுவின் அனுமதி

இலங்கை 07 பில்லியன் அமெரிக்கடொலர் வரை கடன் பெறும் வாய்ப்பு

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாகவும் குறித்த அனுமதியினூடாக 07 பில்லியன் அமெரிக்க டொலர் வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு (20) தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும்.

அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் இலங்கைக்கு இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது.

இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக இலங்கைக்கு பெரிஸ் கழகம், சீனா, இந்தியா உள்ளிட்ட அதன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்தது. சர்வதேச நாணய நிதியத்திற்கு செயற்குழுவைக் கூட்டி இலங்கையின் கடனுக்கான கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் இந்த அனுமதி கிடைத்தது.முன்னெப்போதும் இல்லாத சவால்களில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு தேவையான கொள்கை ரீதியான ஏற்பாடுகள் இந்த திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு:

“இலங்கை சுதந்திரமடைந்து கடந்த 75 வருடங்களில் எமது பொருளாதார எதிர்காலத்திற்கு இதனை விட மிகவும் நெருக்கடியான காலகட்டம் இருந்ததில்லை. எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான மற்றும் சாதகமான செயற்பாடுகளைத் தொடர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு பெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் எமது திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.

ஆரம்பத்திலிருந்தே, நிதி நிறுவனங்களுடனும் எங்கள் கடன் வழங்குபவர்களுடனும் நாங்கள் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன. தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும். இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

“கடந்த ஜூலை மாதம் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, நிலையான கடன் நிலையை அடைவதே எனது முன்னுரிமையாக இருந்தது. அதற்காக சில கடினமான முடிவுகளை எடுத்தோம். ஆனால், நமது சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்தவும், பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களை பாதுகாக்கவும், ஊழலை முற்றாக ஒழிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய, சர்வதேச அளவில் கவர்ச்சிகரமான பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். நமது நாட்டிற்கான இந்த நோக்கை அடைவதற்கு சர்வதேச நாண நிதியத்தின் திட்டம் மிகவும் முக்கியமானது.இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கும் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். எங்களின் அனைத்து கடன் வழங்குநர்களுடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்புபட்டிருக்கிறோம். மேலும் எங்கள் பணி முன்னோக்கிச் செல்லும் சூழலில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் எமது கடன் வழங்குநர்களை ஊக்குவிக்கிறேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் இலங்கையின் நிலையை மேம்படுத்துவதற்கும் சர்வதேச மூலதனச் சந்தைகளை அணுகுவதற்கும் இன்றியமையாததாக இருக்கும். மேலும் முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் திறமைகளுக்கு இலங்கை ஒரு ஈர்ப்புள்ள நாடு என்பதை மீண்டும் நிரூபிக்கும்.”

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 5

Back to top button
error: