மட்டக்களப்பு – பெரியகல்லாறு-2 கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கம் – மாவட்ட அரசாங்க அதிபர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய கல்லாறு – 2 கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்றில் (19) இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 4519 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் 21ம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்டவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் தற்போது தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையிலே பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார முறைகளை எவ்வாறு முன்னெடுப்பது என ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பிரதேச செயலக அடிப்படையில் பிரதேச செயலாளர் சுகாதார அதிகாரிகள், பொலிசார், இராணுவத்தினர் உட்பட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள் கூட்டத்தை கூடி அந்த பகுதியில் இடம்பெறும் விளைவுகளின் தரவுகளை சேகரித்து தீர்மானங்களை எடுத்து அறிவிப்பதன் மூலம் நாங்கள் அதனை நாட்டின் உரிய தரப்பினருக்கு அனுப்பி நடைமுறைப்படுத்த முடியும்.
ஒரு வீட்டில் மரணம் நடந்தால் மரணத்தை தொடர்ந்து அந்த வீட்டிலே உறவினர்கள் ஒன்றாக கூடுவது வழக்கம் இதனால் சமூக நெருக்கங்கள் ஏற்படுகின்றது இதனால் தொற்று அதிகரிக்கின்றது எனவே இன்றில் இருந்து மரணம் இடம்பெற்றால் அந்த வீட்டிற்கு பொது சுகாதார அதிகாரிகளால் அறிவித்தல் விடப்படும் அதனடிப்படையில் தேவையின்றி கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதனை மீறி கூடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாவட்டத்தில் 24 ஆயித்துக்கு மேற்பட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு அடுத்த கட்டான தடுப்பூசி எதிர்வரும் தினங்களில் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இருந்தபோதும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட் பின்னர் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் ஓன்றாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த விடயத்தில் பொலிசார் கண்டிப்பாக செயற்படுவார்கள். எனவே பொதுமக்கள் இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கி செயற்படவும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.