crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பாராளுமன்ம் 17 முதல் 20 ஆம் திகதி வரை கூடும்

இலங்கை பாராளுமன்றத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (13) முற்பகல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்தார்.

இத்தினங்களில் பாராளுமன்றம் மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய தினங்களில் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2307/12 மற்றும் 2308/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழ் 2308/51 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அதனையடுத்து, தனியார் உறுப்பினர் சட்டமூலமாக, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் முன்வைத்த உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் (இல. 126) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த முன்வைத்த உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் (இல. 160) ஆகியவை இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டு சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு முன்வைக்கப்படவுள்ளது.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது.

ஜனவரி 18 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை மேற்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து நியதிச்சட்ட நிறுவனங்கள் சில தொடர்பான பாராளுமன்ற அமைச்சுசார் அலுவல்கள் பற்றிய குழுக்களின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள ஆண்டறிக்கைகள் தொடர்பான 22 பிரேரணைகள் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளன.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி பி.ப. 01.00 மணிக்கு நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதி மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் இடம்பெறவுள்ளது.

ஜனவரி 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்ளுக்கான அனுதாபப் பிரேரணை முன்வைக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலஞ்சென்ற உறுப்பினர்களான கௌரவ உபாலி மேர்வின் செனரத் தசநாயக்க, கௌரவ (கலாநிதி) நெவில் ஆதர் பர்னாந்து, கௌரவ குணரத்ன வீரகோன் மற்றும் கௌரவ ராஜா கொல்லுரே ஆகியோர் பற்றிய அனுதாபப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: