crossorigin="anonymous">
பொது

ஓமான் தூதரக அதிகாரிகள் தொடர்பில் விமர்சனம்

அதிகாரி தொடர்பில் நடவடிக்கை எடுக்காமைக்கு குழு அதிருப்தி

ஓமான் தூதரகத்தில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள அதிகாரிக்கு எதிராக இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதல் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும் அது தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தமை நேற்று (22) நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் புலப்பட்டது.

2022.02.28ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவரினால் குறிப்பிட்ட அதிகாரி தொடர்பில் உள்ளகக் கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாக விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டிருந்ததாக மேலதிக கணக்காய்வாளர் நாயகம் பி.எல்.கே பெரேரா தெரிவித்தார். அத்துடன், இந்த நபர் தொடர்பில் நிதி மோசடி, சான்றிதழ் மோசடி போன்ற குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தலைமையில் நேற்று (22) நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இவ்வாறான நிலையில் குறித்த நபர் தனது பதவியில் இருந்தால் விசாரணைகளுக்குத் தடங்கலாக இருக்கும் என்பதால் உடனடியாக நாட்டுக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜனரல் மஹிந்த ஹதுருசிங்க இவ்வருடம் பெப்ரவரி மாதம் அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் இங்கு தெரியவந்தது. ஊடகங்களின் மூலம் இந்தச் சம்பவம் குறித்த செய்திகள் வெளியாகும்வரை நடவடிக்கை எடுக்காமை குறித்து அதிகாரிகள் மீது கோபா குழு கடுமையான அதிருப்தியை வெளியிட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிடுகையில், 2022.02.28ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவரின் கோரிக்கைக்கு அமைய இந்த அதிகாரி தொடர்பில் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் ஊடாக விசாரணை நடத்தப்பட்டபோதும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த முடியாது போனதாகத் தெரிவித்தார். ஓமானிலுள்ள இலங்கைக்கான தூதுவரின் அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பின்னர், நவம்பர் 4ஆம் திகதி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து கிடைத்த விசாரணை அறிக்கைக்கு அமைய பணியகத்தின் ஊடாக அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் நாயகம் இங்கு தெரிவித்தார்.

குறித்த அதிகாரி தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குழு அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியது.

இவ்வருடம் மே மாதத்திலேயே அமைச்சில் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் குழு முன்னிலையில் தெரிவித்தார். செயலாளர்கள் மாறியிருந்தாலும் அதிகாரிகள் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் குழு சுட்டிக்காட்டியது.

இக்கூட்டத்தில் கோபா உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி அலவத்துவல, கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ (டாக்டர்) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார, கௌரவ வீரசுமண வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆனந்த விமலவீர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 88 + = 94

Back to top button
error: