crossorigin="anonymous">
பொது

அரசியலமைப்புக்கான 22ம் திருத்த சட்டமூலம் விவாதத்துக்கு

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்பிப்பதற்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபஷ தலைமையில் நேற்றுக் (04) கூடிய நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தத் திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் வருகை தந்திருந்தவர்களுக்கு விளக்கமளித்த அமைச்சர், ஜனநாயகத்தை உறுதிசெய்வதற்காக பத்தொன்பதாவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களுக்கு அப்பால் இருபத்திரெண்டாம் திருத்தத்தில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கமைய, பத்தொன்பதாவது திருத்தத்தில் உள்ளடக்கப்படாத விடயமான 41இ உறுப்புரைக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலின் பிரகாரம் ஜனாதிபதி நியமிப்பார் என்பது முக்கியமானது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பத்தொன்பதாவது திருத்தத்தின் கீழ், நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்குப் பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சு சம்பந்தப்பட்ட விடயங்களை வைத்திருப்பதற்கான அதிகாரம் இருபத்திரெண்டாம் திருத்தத்தின் கீழ் பாதுகாப்பு விடயத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் நாளை (06) மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரையும் நாளை மறுதினம் (07) மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 வரையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குழுவின் உறுப்பினர்களான, கௌரவ சிசிர ஜயக்கொடி, கௌரவ தலதா அத்துகோரல, இராஜாங்க அமைச்சர் கௌரவ டயனா கமகே, கௌரவ அங்கஜன் இராமநாதன், கௌரவ டிலான் பெரேரா, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ சாரதி துஷ்மந்த, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ எம்.ஏ. சுமந்திரன், கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன்,

கௌரவ (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பத்தி, கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ நிமல் பியதிஸ்ஸ, கௌரவ குணாதிலக ராஜபக்ஷ, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம். ராமேஸ்வரன், கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ கெவிந்து குமாரதுங்க, கௌரவ லலித் வர்ன குமார மற்றும் அரச அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 90 − 85 =

Back to top button
error: