crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை – எத்தியோப்பிய வெளிநாட்டு அமைச்சு மட்டத்திலான இருதரப்பு கலந்துரையாடல்

இலங்கை எத்தியோப்பியக் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசுடனான வெளிநாட்டு அமைச்சு மட்டத்திலான மெய்நிகர் இருதரப்பு ஆலோசனைகளை நேற்று (09) முன்னெடுத்தது.

அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைக்கு அமைவாக, ஆபிரிக்கப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னுரிமை அளித்துள்ளார்.

இலங்கைக்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையிலான இருதரப்பு ஆலோசனைகள் முதன் முறையாக நடைபெற்றது. அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்த ஆலோசனைகளின்போது கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டு அமைச்சின் ஆபிரிக்கா விவகாரங்கள் பிரிவிற்கான பணிப்பாளர் நாயகம் திரு. பி. காண்டீபன் இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய அதே வேளை, எத்தியோப்பியத் தூதுக்குழுவானது எத்தியோப்பியா வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் ஆசியா மற்றும் பசிபிக் பிரிவிற்கான பணிப்பாளர் நாயகம் திரு. அஸ்பாவ் மொல்லலின் அவர்களால் தலைமை தாங்கப்பட்டது.

தற்போது இலங்கையின் 3 ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் 1 இரசாயன உற்பத்தி நிறுவனம் ஆகியன எத்தியோப்பியாவில் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்து 5,000 க்கும் மேற்பட்ட எத்தியோப்பியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருப்பதாக இந்தக் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

விவசாயப் பதப்படுத்தல், நீர் மின் உற்பத்தி, ஆடை மற்றும் இரசாயனங்கள் தயாரித்தல் போன்ற ஏனைய துறைகளில் இலங்கை நிறுவனங்கள் மேலும் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டது. எத்தியோப்பியாவில் விருந்தோம்பல் மற்றும் ஆடை உற்பத்தித் துறைகளில் தற்போது 400 க்கும் மேற்பட்ட இலங்கை வல்லுநர்கள் பணியாற்றி வருவதாகவும், எத்தியோப்பியாவில் உள்ள தனியார் துறை நிறுவனங்களில் இலங்கையர்களுக்கு திறமைசார் வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.

இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடல்களின்போது கவனம் செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டிற்கான மொத்த வர்த்தகம் 37 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எத்தியோப்பியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி 36.83 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட்டதுடன், இது தொடர்பாக இரு நாடுகளினதும் வணிக சபைகள் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடர்வதற்கான மிகையான ஆர்வத்தை எத்தியோப்பியா வெளிப்படுத்தியது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்துதல் மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்தின் மூலம் ஒத்துழைப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பரஸ்பரம் ஆர்வமுள்ள துறைகளிலான நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளும் கலந்துரையாடின. இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு பொருத்தமான முறையில் கொண்டாடுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

எத்தியோப்பியாவிற்கான இலங்கைத் தூதுவர் சுகீஷ்வர குணரத்ன, வெளிநாட்டு அமைச்சு மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 15 + = 18

Back to top button
error: