தேசிய எரிபொருள் அட்டை அறிமுகம்

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) தொழில்நுட்ப ஆதரவுடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் தேசிய எரிபொருள் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (பாஸ்) நேற்று (16) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
http://fuelpass.gov.lk/ என்ற இணையத்தில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட அமைச்சர், திட்டம் எப்போது செயற்படுத்தப்படும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
ஒரு தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் ஒரு வாகனத்தை பதிவு செய்ய முடியும், வாகனத்தின் சேஸ் எண் உட்பட ஏனைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்றார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகியவற்றின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த சேவை மூலம் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.