வெளிநாடு செல்வதை தடை செய்யுமாறு நீதிமன்றத்தில் மனு

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் வெளிநாடு செல்வதைத் தடை செய்யுமாறு கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் இன்று (12) நகர்த்தல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவ இவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் ஜுலை 27ஆம் திகதி உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், குறித்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுவின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியும் எங்கு உள்ளார் என்பது தொடர்பில் தெரியாத நிலையில், ஏனைய பிரதிவாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக குறித்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எனவே, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரை அனுமதியின்றி வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவைவ வழங்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.